த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் மழை தொடரு‌ம் - மழைராஜ்

வெள்ளி, 8 ஜூலை 2011 (19:33 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் மழை மேலும் தொடர வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வுசெய்து வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்ததுபோல், ஜூலை 5ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதன்பிறகு இரண்டு தினங்கள் ஓரிரு இடங்களைத் தவிர மழை இல்லை.

இந்நிலையில், ஜூலை 8ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களிலும், வட தமிழகத்தி‌ன் பெரும்பாலான இடங்களிலும், திண்டுக்கல், தேனி உட்பட தென் தமிழகத்தின் சில இடங்களிலும் 9 முதல் 11ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வடக்கு கேரளா, தெற்கு கர்நாடகாவின் சில பகுதிகள், வடக்கு கர்நாடகா, மகாராஷ்டிராவிலும், ஆந்திராவின் பெரும் பகுதிகளிலும், ஒரிஸாவிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் இந்தியாவில் அரபிக் கடல் பகுதியைவிட வங்கக் கடல் பகுதியில் உள்ள மாநிலங்களிலும், இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களும் கூடுதல் மழை பெறும். நிலநடுக்க கணிப்பின்படி ஜூலை 9ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்