தென்மேற்கு பருவ மழை தீவரமடையும் - மழைராஜ்

செவ்வாய், 7 ஜூன் 2011 (14:46 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :

கடந்த மே மாதம் 27ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை பெய்யத் துவங்கியது. 27 முதல் 30 வரை மிக பலத்த மழை பெய்தது. மே 21 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மழையின் தாக்கம் குறைவாக இருந்தது. மே 30ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் ஜூன் 2 முதல் 5 வரை பலத்த மழை பெய்யும் எனத் தெரிவித்திருந்தேன். ஜூன் 2 முதல் 4 வரை புதுக்கோட்டை, திருநெல்வேலி உட்பட மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பலத்த மழை கொட்டியது. ஜூன் 5ஆம் தேதி மழையின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல், ஜூன் 6ஆம் தேதி கணிப்பின்படி 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 10 முதல் 12 வரை மழையின் தீவிரம் குறைந்து மீண்டும் 13ஆம் தேதி முதல் பருவ மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஜூன் 9 வரை கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தருமபுரி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக பலத்த மழையும், சேலம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கண்ட தேதிகளில் கேரளா, தெற்கு கர்நாடகா பகுதிகளில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. தென்மேற்குப் பருவ மழையைப் பொறுத்தவரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட கூடுதல் மழையும், கேரளா மற்றும் கர்நாடகாவிலும், இந்தியாவன் பெரும்பாலான மாநிலங்களிலும் 70 விழுக்காடு பகுதிகளில் இயல்பைவிட கூடுதல் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கேரளா, தெற்கு கர்நாடகா, ஒரிசா, வடக்கு ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் வரலாறு காணாத மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்