தமிழகம் - 2015: கனமழையால் வெள்ளத்தில் தத்தளித்த மக்கள்

ஞாயிறு, 27 டிசம்பர் 2015 (14:07 IST)
2015 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால், சென்னை உள்ளிட்ட தமிழத்தின் கடலோர மாவட்டங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாயின.


 

 
தமிழகத்தில் 2015 ஆம் அண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28 ஆம் தேதி துவங்கியது. இதைத் தொடர்ந்து, மிக அதிக அளவில் கனமழை பொழியத் தொடங்கியது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் மிக அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகின.
 
பின்னர் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும், மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.
 
இந்த கனமழை 4 கட்டங்களாக பெய்தது. நவம்பர் 8, மற்றும் 10 ஆகிய நாட்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 26.6 செ.மீ. மழை பெய்ததால், கடலூர் மாவட்டம் மழையால் அதிக அளவு பாதிக்கப்பட்டது.
 
கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் 38 செ.மீ. அளவுக்கு பெருமழை பெய்தது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர் 13 ஆம் தேதி 32.6 செ.மீ. மழை பெய்தது. அதிகப்படியாக பெய்த இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். இலட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு பாதுகபான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
 
மேலும், நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
 
நவம்பர் 15 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, தாம்பரம், திருக்கழுக்குன்றம் மற்றும் மாமல்லபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்னேரி, தாமரைப்பாக்கம், செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் ஒரே நாளில் 23 செ.மீ. முதல் 37 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிலான கனமைழை என்று தெரிவிக்கப்பட்டது.
 
இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால், உபரிநீர் திறந்து விடப்பட்டன. திறக்கப்பட்ட தண்ணீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்தது.
 
டிசம்பர் 1 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, மீண்டும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. தாம்பரம் பகுதியில் மட்டும் அதிகப்படியாக 49.4 செ.மீ. மழை பெய்தது. இதனால் பல ஏரிகளில் உடைப்பு எற்பட்டது.
 
இந்நிலையில், நள்ளிரவில் செம்பரம் பாக்கம் ஏரியிலிந்து கூடுதலான தண்ணீர் போதய முன்னறிவிப்பு இன்றி திறந்துவிடப்பட்டது. அத்துடன் பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரிகளிலிருந்தும் கூடுதல் தண்ணீர் திறந்துபிடப்பட்டன.

இதன் காரணமாக அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், ஆகியவற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
 
செம்பரம் பாக்கம் ஏரியிலிந்து திறந்துவிடப்பட்ட வெள்ளம் அடையாறு ஆற்றில், அதன் கொள்ளவைவிட மிகவும் அதிகமாக இருத்தால் சென்னை நகரின் பெரும்பான்மையான பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அதேபோல கூவம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் இருந்த குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
 
இந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர், மேலும் ஏராளமாக, வானங்கள் உள்ளிட்ட உடைமைகள் நாசமாயின. அனைத்துத் தரப்பு மக்களும் இந்த வெள்ள பாதிப்பிற்கு உள்ளாயினர்.

கடுமையான துன்பத்திற்கு இடையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தவித்துக் கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். ஆயினும் மாதக்கணக்கில் பல இடங்களில் தேங்கிய தண்ணீர் வடியததால் மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது.
 
இந்த கனழைக்கு சென்னையைவிட கடலூர் மாவட்டம் மிகுதியாகப் பாதிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மத்திய மாநில அரசுகள் நிவாரண நிதியை அறிவித்தன.
 
இந்நிலையில், இத்தகைய பாதிப்புகளுக்கு, மாநில அரசின் மெத்தனம்தான் காரணம் என்றும் உரிய நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிட்டிருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று எதிர்கட்சிகள் உள்ளிட்டோர் குற்றம் சாற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்