கால்பந்து போட்டியை பார்க்க ஆண் வேடமிட்ட பெண்! – தண்டனைக்கு பயந்து தற்கொலை!

புதன், 11 செப்டம்பர் 2019 (15:08 IST)
ஈரானில் கால் பந்து போட்டியை பார்ப்பதற்காக ஆண் வேடமிட்டு சென்ற பெண் தண்டனைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகம். அதில் ஒன்று விளையாட்டு போட்டிகளை பார்க்க பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை. இந்த தடை ஈரான் அரசால் அதிகாரப்பூர்வமாக எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டதில்லை என்றாலும், ஈரானின் பிற்போக்குவாதிகளால் இன்னமும் நடைமுறையில் இருக்கிறது.

இந்நிலையில் சஹர் கோடயாரி என்ற பெண் தனக்கு விருப்பமான கால்பந்து அணியினர் ஆடும் ஆட்டத்தை பார்க்க விரும்பியிருக்கிறார். ஆனால் பெண்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் வேறு ஒரு திட்டம் போட்டிருக்கிறார் சஹர். ஆண் போல வேடமிட்டு கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்திருக்கிறார் சஹர். ஆனால் அவர் ஆண் அல்ல என்பதை அங்கிருந்த காவலர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.

அந்த பெண்ணை வெளியேற்றியதுடன், அவர் மீது வழக்கும் பதிந்திருக்கிறார்கள். இது அந்த பெண்ணை மனதளவில் பாதித்திருக்கிறது. அவரது வழக்கு விசாரனைக்கு வரும் நாளில் நீதிபதி வர தாமதமாகி இருக்கிறது. அப்போது அருகே இருந்தவர்கள் சஹருக்கு அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என பேசிக் கொண்டிருந்திருக்கின்றனர். இதனால் மனமுடைந்த சஹர் தண்டனைக்கு பயந்து நீதிமன்ற வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஒரு கால்பந்தாட்டத்தை பார்க்க ஆசைப்பட்டதற்கு உயிரையே பறிகொடுத்தார் சஹர். இது எவ்வளவு மோசமானது என்று கூறி மக்கள் போராட்டம் செய்துள்ளனர். விளையாட்டுகளை பார்ப்பது தவறு என்றால், விளையாடுவதும் தவறு ஆக்வே ஈரானை எந்த உலக நாடுகளும் விளையாட்டில் சேர்த்து கொள்ளாதீர்கள் என அவர்கள் கோஷமிட்டுள்ளனர். இந்த சம்பவம் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்