பூமி தட்டை என நிரூபிப்பேன்: விண்ணுக்கு பறந்த விமானி – சோகத்தில் முடிந்த பயணம்!

செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (08:51 IST)
பூமி தட்டை என நிரூபிப்பதற்காக விண்ணுக்கு பறந்த விமானி கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிப்ஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் மைக் ஹ்யூக்ஸ். விமானியான இவர் “தட்டை பூமி” கொள்கையில் நம்பிக்கை உடையவர். பூமி உருண்டை அல்ல தட்டை என நிரூபிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

மேலும் பூமி தட்டை என்பதை காண விண்வெளிக்கு செல்ல முற்றிலும் நீராவியால் இயங்கும் ராக்கெட் ஒன்றையும் வீட்டிலேயே தயாரித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அதை சோதித்த அவர் தரையிலிருந்து 1,870 அடி உயரத்துக்கு பறந்து சென்று பாராசூட் மூலம் தரையிறங்கினார்.

அந்த வெற்றிக்கு பிறகு தனது இலக்கை 5 ஆயிரம் அடியாக உயர்த்திய மைக் அதற்கேற்றார்போல் ராக்கெட்டை வடிவமைத்து விண்ணில் பறந்தார். ஆனால் ராக்கெட் கிளம்பிய சில நொடிகளிலேயே ராக்கெட்டில் இருந்த பாராசூட் தனியாக அறுபட்டுவிட்டதால் மிக உயரத்திலிருந்து ராக்கெட் விழுந்து நொறுங்கியது. இதில் மைக் ஹ்யூக்ஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் கலிஃபோர்னியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்