விஜய் சேதுபதியை கண்டித்தாரா காயத்ரி ரகுராம்? – ட்விட்டரில் விளக்கம்!

செவ்வாய், 17 மார்ச் 2020 (14:58 IST)
விஜய் சேதுபதி கடவுள் குறித்து பேசிய கருத்துக்கு காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்த விளக்கத்தை காயத்ரி ரகுராம் அளித்துள்ளார்.

வழக்கமாக நடிகர் விஜய் படங்களில் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் அவர் பேசும் குட்டி ஸ்டோரிகள்தான் வைரலாகும். இந்த முறை வித்தியாசமாக விஜய் சேதுபதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி ”கடவுளை யாரும் காப்பாற்ற தேவையில்லை. கடவுளை காப்பாற்றுவதாய் சொல்லிக் கொள்பவர்களை நம்ப வேண்டாம். கொரோனாவை விட இங்கு வேறு சில விஷயங்கள் அச்சுறுத்தலாய் இருக்கிறது. மனிதனுக்கு மனிதன்தான் உதவ வேண்டும். கடவுள் மேலே இருப்பவர் அவருக்கு உதவி தேவையில்லை” என்று பேசியிருந்தார்.

விஜய் சேதுபதியின் இந்த பேச்சு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம் ”மனிதனை மனிதன் நம்ப வேண்டும்தான். ஆனால் கடவுளை நம்பும் மக்களிடமிருந்து அவர்களது நம்பிக்கையை அழிக்க முடியாது. மனிதனின் வெற்றியை நிர்ணயிப்பது கடவுள்தான். சகமனிதனல்ல” என்று கூறியுள்ளார்.

இதனால் விஜய் சேதுபதியின் கருத்துக்கு காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. தான் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை என ட்விட்டரில் விளக்கமளித்த காயத்ரி ரகுராம் ”விஜய் சேதுபதி கருத்தை நான் கண்டிக்கவில்லை. அவருக்கு சுதந்திரமாக பேச உரிமையுள்ளது. அதுபோல எனது கருத்தை பேசவும் எனக்கு உரிமையுள்ளது. அவரது கருத்தில் நான் உடன்படவில்லை என்பதைதான் தெரிவித்திருந்தேன். மதச்சார்பின்மைக்கு ஏற்ப நாத்திகர்கள் அவர் பேச்சை விரும்புவார்கள்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்