அம்மா மீது அக்கறை கொண்டவர்; என் நண்பர் பாண்டியன்! – டிடிவி தினகரன் அஞ்சலி

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (11:19 IST)
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமான நிலையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவருக்கு அஞ்சலி செலுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் உடல்நல குறைவால் சென்னையில் இன்று காலமானார். இந்நிலையில் அவரது இறப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தா.பாண்டியனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பெரியவர் தா.பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவர், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முக ஆற்றலாளர். அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும், செயல்பட்டும் வந்தவர்” என்று கூறியுள்ளார்.

மேலும் “கட்சிகளைத் தாண்டி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர். தனிப்பட்ட முறையில் என்னோடு நட்புடனும் அன்புடனும் பழகியவர். திரு. தா.பாண்டியன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்