ஓபிஎஸ்-க்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்..! முக்கிய உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..!!

Senthil Velan

திங்கள், 25 மார்ச் 2024 (11:48 IST)
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகிகியவற்றை  பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
இதனை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? என்பது குறித்து நிலுவையில் உள்ள பிரதான வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், மேல் முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகிகியவற்றை  பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் ஒ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். தேர்தல் ஆணையத்தை அணுக தடையில்லை என தெரிவித்த நீதிபதிகள், இறுதி விசாரணைக்காக வழக்கை ஜூன் மாதம் பத்தாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்