50 அரசு கல்லூரிகளில் இனி ஒரே ஷிப்ட் முறைதான்! – தமிழக அரசு அரசாணை!

புதன், 29 ஜூலை 2020 (15:44 IST)
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகள் செயல்படும் நேரத்தை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பல இரண்டு ஷிப்ட் முறையில் செயல்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு 2006க்கு முந்தைய நடைமுறை போலவே ஒரே ஷிப்ட் முறையில் கல்லூரிகளை நடத்த தமிழக அரசின் உயர்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

பல அரசு கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் அதிகம் இருந்தாலும் கட்டிட வசதிகள் குறைவாக உள்ளதால் இரண்டு ஷிப்ட் முறையில் காலை முதல் மதியம் வரை சில பட்டய வகுப்புகளும், மதியம் முதல் மாலை வரை சில பட்டய வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்லூரிகளில் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு பழைய நடைமுறைப்படி காலை முதல் மாலை வரை வகுப்புகளை மதிய உணவு இடைவெளியுடன் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 50 அரசு கல்லூரிகளில் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை பாடவேளையாக செயல்படுத்த உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 109 அரசு கல்லூரிகளிலும் இந்த பாடவேளை முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்