போதை மாநிலமாக மாறிய தமிழகம்..! இபிஎஸ் குற்றச்சாட்டு.!!

Senthil Velan

செவ்வாய், 12 மார்ச் 2024 (13:10 IST)
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அதனால் இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
திமுக அரசை கண்டித்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், போதை பொருள் விவகாரத்தில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து மொத்த போதை பொருள் விற்பனை இடமாக தமிழகம் மாறி இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
 
போதை பொருள் விற்பனையை பல ஆண்டுகாலமாக ஜாபர் சாதிக் அமோகமாக செய்து வந்துள்ளார் என்றும் ஜாபர் சாதிக் திமுக அயலக அணியில் இருந்தவர், பல ஆண்டுகளாக வெளி நாட்டுக்கு போதை பொருள் விற்பனை செய்து பல ஆயிரம் கோடி சம்பாதித்து திமுக நிர்வாகிகளுக்கு கொடுத்ததாகவும், ஹோட்டல், சினிமா படம் தயாரிப்பு, அரசியல் கட்சியினருக்கு நிதி வழங்கியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
 
இதையெல்லாம் முறையாக விசாரித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில்  மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
 
ஜாபர் சாதிக், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக செய்தி வருகிறது என்றும் முதலமைச்சரிடம், அமைச்சர் உதயநிதியிடம் நிதி வழங்குவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது என்றும் முறையாக மத்திய அரசு விசாரித்து யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் பத்து நாட்களில் மட்டும் 150 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். நேற்று கூட புதுக்கோட்டையில் 110 கோடி மதிப்பில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் இதை அத்தனையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குழு தான் கண்டுபிடித்தது என்றும் மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டு உள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

ALSO READ: நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை.!
 
போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது குறித்து  முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் மக்களுக்கு பதில் அளிக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்