சசிகலாவிடம் விசாரணை – பெங்களூர் செல்லும் வருமான வரித்துறை ?

வியாழன், 13 டிசம்பர் 2018 (10:11 IST)
பெங்களூர் சிறையில் இருக்கும் அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் பெங்களூர் செல்ல இருக்கின்றனர்.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான  சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2 வது குற்றவாளியான சசிகலா கடந்த இரு ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் சசிகலா மற்றும் அவருடன் தொடர்புடைய அவரின் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தியா முழுவதும் 5 நாட்கள் சோதனை நடைபெற்றது. இதில் முக்கியமான சில ஆவணனங்கள் மற்றும் தகவல்கள் கிடைத்ததாக கூறப்பட்டது.

அதனடிப்படையில் சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், விவேக் உள்ளிட்டோரிடம் விசாரணையும் நடத்தினர். தற்போது விசாரணையின் அடுத்த கட்டமாக பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் இது குறித்து விசாரணை நடத்த இருக்கின்றனர். இது சம்மந்தமாக பெங்களூர் சிறைத்துறையின் அனுமதியைப் பெற்றுள்ள வருமான வரித்துறை இன்றும் நாளையும் சசிகலாவிடம் விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்