கேரள முதல்வரை போல செயல்படுங்கள் – எடப்பாடியாருக்கு ராமதாஸ் கோரிக்கை!

வியாழன், 19 மார்ச் 2020 (15:45 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைய தொடங்கியுள்ள சமயத்தில் வங்கி கடன் விவகாரங்களில் கேரள முதல்வரை போல எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் என ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்களும், ஊழியர்களும் கடும் பண நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அதை திரும்ப செலுத்த முடியாத இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளை கருத்தில் அனைத்து வகை வங்கிக் கடன் தவணைகளையும் 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும். இந்த காலத்திற்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதொடர்பாக பொதுத்துறை வங்கி அதிகாரிகளை தமிழக முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும்!” என  கூறியுள்ளார்.

மேலும் “கேரளத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வங்கி அதிகாரிகளை அழைத்து பேசியுள்ளார். அவர்களும் சாதகமாக பதிலளித்துள்ளனர். அவரது நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதே போல் தமிழக முதல்வரும் செய்து அடித்தட்டு மக்களுக்கு உதவ வேண்டும்!” என  தெரிவித்துள்ளார்.

தற்போது பல இடங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் மற்றும் வணிகம் முடங்கியுள்ள சூழலில் இதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாத வருமானம் பெறும் ஊழியர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வேண்டுகோளாக உள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்