”விருது தவறான கைகளுக்கு சென்றுவிடக்கூடாது”..பொன்.மாணிக்கவேல் விளக்கம்

Arun Prasath

ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (13:50 IST)
ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டதை எதிர்த்த பொன்.மாணிக்கவேல், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 13 பேர் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்தனர். அந்த 13 பேரில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோவும் ஒருவர். அந்த புகாரில், உரிய ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாமல் சட்டத்திற்கு முரணாக வழக்குப்பதிவு செய்யச்சொல்லி பொன்.மாணிக்கவேல் வற்புறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த பொன்.மாணிக்கவேல் “புகார் அளித்த அதிகாரிகளை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குகிறார்கள்” என கூறினார்.

சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தங்களுக்கு கொடுத்த இடையூறு காரணமாக உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவே இல்லை எனவும் ஏடிஎஸ்பி இளங்கோ பொன்.மாணிக்கவேல் மீது குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் தற்போது பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஏடிஎஸ்பி இளங்கோவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், இளங்கோவிற்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த ஏடிஎஸ்பி இளங்கோ “ பொன்.மாணிக்கவேல் மீது நான் அளித்த புகாரை மனதில் வைத்துக் கொண்டு தான் இவ்வாறு செய்கிறார். மேலும் என்னை அசிங்கப்படுத்தும் நோக்கில் தான் அவர் எனக்கு விருது தருவதை எதிர்க்கிறார்” எனவும் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இளங்கோவின் குற்றச்சாட்டை குறித்து தற்போது பொன்.மாணிக்கவேல் விளக்கமளித்துள்ளார். அதில், “ஏடிஎஸ்பி இளங்கோ மீது நடவடிக்கை எடுக்க வைப்பது என் நோக்கம் இல்ல, தவறான நபருக்கு விருது சென்று அரசுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இளங்கோவிற்கு விருது வழங்குவதை எதிர்த்தேன்” என கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்