தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா

Siva

புதன், 13 மார்ச் 2024 (07:09 IST)
தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி இருப்பது இரு மாநில உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக கூறப்படும் நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதால் தமிழகத்திற்கு இனிமேல் தண்ணீர் தர முடியாது என துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் கூறினார்.

தமிழகத்திற்கு தண்ணீர் தர நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்றும் தமிழகத்திற்கு தண்ணீர் தருவது என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது டிகே சிவகுமாரை அடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழ்நாட்டில் உள்ளவர்கள் யாரும் தண்ணீர் கேட்கவில்லை, ஒருவேளை அவர்கள் கேட்டாலும் அவர்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். எங்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது, குடிநீருக்காக நாங்கள் தண்ணீர் வைத்துள்ளோம், எனவே தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு சொன்னாலும் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனையை இரு கட்சிகளும் எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்