சரக்கு என சுக்கு காபியைக் கொடுத்து ஏமாற்றிய கும்பல்! எப்படியெல்லாம் யோசிக்குறாங்க !

சனி, 4 ஏப்ரல் 2020 (10:15 IST)
விருதுநகர் அருகே டாஸ்மாக் கடையில் மதுவுக்காக காத்திருந்தவர்களிடம் சுக்குக் காபியை கொடுத்து ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் முழுவதும் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் பாதிக்கபப்ட்டுள்ளனர். இதனால் டாஸ்மாக் கடைகளுக்கு முன்னர் கூட்டம் கூடுவது வாடிக்கையாகி உள்ளது. எப்படியாவது பிளாக்கிலாவது சரக்கு வாங்கி குடிக்க தவித்து வருகின்றனர். இதனால் மூன்று மடங்கு வரை அதிகமாக விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் டாஸ்மாக் கடை முன்னர் காத்திருந்த ஒரு கும்பலிடம் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் தங்களிடம் மது உள்ளதாகவும் ஆனால் ஒரு பாட்டில் 300 ரூபாய் என்றும் சொல்லி இரண்டு பாட்டில்களை விற்றுள்ளனர். அப்போது விற்ற கும்பல் போலீஸ் வருவதாக சொல்ல, வாங்கியவர்கள் தெறித்து ஓடியுள்ளனர்.

பாதிதூரம் சென்று சரக்கைக் குடிக்கலாம் என திறந்தபோது பாட்டிலில் இருந்தது சரக்கு அல்ல சுக்குக்காபி எனக் கண்டுபிடித்துள்ளனர். மக்களின் குடி ஆசையைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு கும்பல் இப்படி நூதனமாக ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்