திமுக அரசு வெளியிட்ட சுற்றறிக்கை செல்லாது: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை

Sinoj

புதன், 6 மார்ச் 2024 (20:14 IST)
பத்திரப்பதிவுத் துறையில், பொதுமக்கள் கருத்தைக் கேட்டறியாமல், சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று திமுக அரசு வெளியிட்ட சுற்றறிக்கை செல்லாது என மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

''கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல், சுமார் 50% அளவுக்கு வழிகாட்டி மதிப்பை திமுக அரசு முன்னறிவிப்பின்றி உயர்த்தியதால், பொதுமக்களும், கட்டுமான நிறுவனங்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இதனை அடுத்து, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பிறப்பித்த வழிகாட்டி மதிப்பு உயர்வு அறிக்கை சட்டவிரோதமானது என்றும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி புதிய வழிகாட்டி மதிப்பை அறிவிக்கும் வரை, 2017 ஆம் ஆண்டு அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும் என்றும் மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், திமுக அரசு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வண்ணம், தொடர்ந்து கூடுதல் கட்டணத்தையே வசூலித்து வந்தது. தொடர்ந்து பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்த பின்னரும், தமிழக அரசு அவற்றைக் கண்டுகொள்ளாமல் கூடுதல் கட்டணத்தையே வசூலித்து வந்தது.

திமுக அரசின் இந்த நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான, சட்டவிரோத நடவடிக்கையைக் கண்டித்தும், மீண்டும் 2017 ஆம் ஆண்டிற்கான வழிகாட்டி மதிப்பைப் பின்பற்ற வலியுறுத்தியும், தமிழக பிஜேபி சார்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்றும், கடந்த ஜனவரி 17, 2024 அன்றும், அறிக்கைகள் வெளியிட்டிருந்தோம். இன்றைய தினம், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், திமுக அரசு, பத்திரப்பதிவுத் துறையில் 2017 ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பையே பயன்படுத்த வேண்டும் என்று, முந்தைய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது.

சட்டவிரோதமாக இத்தனை நாட்களாகக் கூடுதல் கட்டணம் வசூலித்து, மக்களை அவதிக்குள்ளாக்கிய திமுக அரசுக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பு சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது. இத்தோடு நில்லாமல், இத்தனை நாட்களாக பொதுமக்களிடமிருந்து வசூலித்த கூடுதல் கட்டணத்தை, பொதுமக்களுக்கே திருப்பித் தர வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன் ''என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்