பிப்.25 முதல் தேமுதிகவில் விருப்பமனு அளிக்கலாம்: விஜயகாந்த்

வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:03 IST)
வரும் சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளிக்கலாம் என ஏற்கனவே அதிமுக திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் தேமுதிகவும் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பது குறித்து அறிக்கை ஒன்றை அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
 
தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில்‌ தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்‌ சார்பில்‌ போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும்‌ கழகத்‌ தொண்டர்களும்‌ சட்டமன்ற தேர்தல்‌ விருப்பமனுக்களை சென்னை கோயம்பேட்டில்‌ உள்ள தலைமை கழகத்தில்‌ 25.02.2021 வியாழக்கிழமை முதல்‌ 05.08.2021 வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை
விருப்பமனுக்களை பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து தலைமை கழகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌. சட்டமன்றத்‌ தேர்தலில்‌ கழகத்தின்‌ சார்பில்‌ போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின்‌
நிர்வாகிகளாகவும்‌, கழகத்தின்‌ அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும்‌ தகுதியானவர்கள்‌ ஆவர்‌.
 
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய்‌ 15 ஆயிரமும்‌, தமிழ்நாடு சட்டமன்ற தனி தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய்‌ 10 ஆயிரமும்‌, புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய்‌ 10 ஆயிரமும்‌, புதுச்சேரி சட்டமன்ற தனி தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய்‌ 5 ஆயிரம்‌ செலுத்தி 'விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம்‌.
 
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்‌ தலைமை கழக நிர்வாகிகள்‌ உயர்மட்ட குழு உறுப்பினர்கள்‌, தேர்தல்‌ பனி குழு செயலாளர்கள்‌, கழக சார்பு அணி நிர்வாகிகள்‌, மாவட்டம்‌, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்‌, ஒன்றியம்‌, நகரம்‌, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம்‌, வார்டு, கிளைக்‌ கழக நிர்வாகிளும்‌, சார்பு அணி நிர்வாகிகளும்‌ மற்றும்‌ கழகத்‌ தொண்டர்களும்‌ நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில்‌, தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரியில்‌ நாம்‌ மாபெரும்‌ வெற்றியடைய பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்‌.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்