குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு..! ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேருக்கு நோட்டீஸ்..!!

Senthil Velan

சனி, 27 ஏப்ரல் 2024 (10:22 IST)
புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக எழுந்த புகாரில் ஊராட்சி செயலாளர் காளிமுத்து, தொட்டி பராமரிப்பாளர் ரங்கசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவண்டான் தெருவில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது கடந்த 2013-2014ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் ரவிக்குமார் (37) என்பவருக்கு குடிநீர் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் அருகிலுள்ள திருவோணம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
 
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீரில் மாட்டு சாணம் கலந்து வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து ஆதிதிராவிடர் தெருவில் இருக்கும் இளைஞர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தனர். அப்போது குடிநீர் தொட்டிக்குள் மாட்டு சாணம் கிடந்துள்ளது.

இதுதொடர்பாக கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஆணையர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், கல்லாக்கோட்டை வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, கிராம நிர்வாக அலுவலர் சுபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

ALSO READ: 2ம் கட்ட மக்களவை தேர்தல்..! 63.50 சதவீதம் வாக்குப்பதிவு..!
 
இந்நிலையில் குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக எழுந்த புகாரில் ஊராட்சி செயலாளர் காளிமுத்து, தொட்டி பராமரிப்பாளர் ரங்கசாமி ஆகியோருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தொட்டியை ஏன்  முறையாக சுத்தம் செய்யவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்