அதிமுகவின் எதிர்காலம் ; அதிருப்தியில் நிர்வாகிகள் : தினகரனுடன் சமரசம்?

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (15:25 IST)
அதிமுகவின் எதிர்காலம் கருதி டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவது நல்லது என ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கருதுவதாக செய்தி கசிந்துள்ளது.

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் அணிக்கு எதிராக அரசியல் களத்தில் அதிரடி ஆட்டம் காட்டி வருகிறார் தினகரன். ஆர்.கே.நகரில் ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளரையே அவர் தோற்கடித்தார். அவர் செல்லும் இடமெங்கும் கூட்டம் கூடுகிறது. தொடர்ந்து பல மாவட்டங்களுக்கும் அவர் சுற்றுப்பயணம் செய்து அவரின் ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் சந்திக்கிறார். செய்தியாளர்கள் எப்படிப்பட்ட கேள்விகள் எழுப்பினாலும் சிரித்துக்கொண்டே எதிர்கொள்கிறார். மொத்தத்தில் அரசியல் களத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.
 
அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா போன்ற தலைமை இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸின் தலைமை மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்போதுள்ள நிலைமையில் தேர்தல் நடத்தினால் பல தொகுதிகளில் அதிமுக படு தோல்வியை சந்திக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
 
பாஜகவின் தயவில் ஆட்சியை காப்பாற்றிக்கொண்டாலும், அதிமுக என்கிற கட்சி வலுவாக இல்லை. இது மூத்த தலைவர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. இந்த விவகாரம் சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் எதிரொலித்தது. அப்போது பேசிய பல நிர்வாகிகள் அதிமுக பலவீனமடைந்து வருவதை சுட்டிக் காட்டி பேசினார்களாம். 

 
குறிப்பாக, 2019ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பெரும்பாலான கட்சிகள் முன்வராது என அவர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் கண்டிப்பாக திமுகவுடன் கூட்டணி வைக்கும். விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுகவுடன் சேராது. ஏன்? திமுகவின் கூட்டணியை பெற பாஜகவே காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இது அதிமுக பலவீனமடைந்து வருவதை தெளிவாக காட்டுகிறது என நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
 
பாஜக ஆதரவோடு ஆட்சியை தக்க வைத்துக்கொண்டாலும், பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் அது அதிமுகவின் எதிர்காலத்தை பாதிக்கும் என அதிமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, இப்போதுள்ள சூழ்நிலைக்கு தினகரனுடன் சமாதானமாக செல்வதே சிறந்தது என பலரும் பேச தொடங்கியுள்ளனராம். 
 
அதிமுகவினரை பொறுத்தவரை யாரேனும் ஒருவர் தலைமையில் அடைக்கலமாகி எம்.எல்.ஏ, அமைச்சர் என பதவிகளில் நீடித்து காலத்தை ஓட்டுவதே வழக்கம். அந்த தலைமைக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்-ஐ விட தினகரன் சரியாக இருப்பார் எனவும், அவரது தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதே சிறந்தது என வட மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பேச தொடங்கியுள்ளனராம். விரைவில் அவர்கள் இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்