4 வயது குழந்தை கற்பழித்து கொலை: முன்னாள் ராணுவ வீரர் கைது

வெள்ளி, 28 ஜூன் 2019 (11:39 IST)
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில், அந்தோனியார் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் செந்தமிழ்ச் செல்வி. இவர்களுக்கு 7 வயது மகனும், 4 வயது மகளும் உள்ளனர்.

இந்நிலையில் செந்தமிழ் செல்வி, 2 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகனை, நேற்று மாலை டியூஷனில் விடுவதற்காக சென்றுள்ளார். அப்போது தனது 4 வயது மகளை வீட்டில் தனியாக விட்டுச் சென்றார்.

மகனை ட்யூஷனில் விட்டுவிட்டு, வீடு திரும்பிய போது 4 வயது சிறுமி காணவில்லை. பின்பு எங்கு தேடியும் கிடைக்காததால் செந்தமிழ்ச் செல்வி திருமுல்லைவாயில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸில் புகார் அளித்துவிட்டு விட்டிற்கு திரும்பிய போது செந்தமிழ்ச் செல்விக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கழிவறையில் இருந்த வாலியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார் 4 வயது சிறுமி.

பின்பு உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், 4 வயது சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை மேற்கு மண்டல இணைய ஆணையர் விஜயகுமாரி மற்றும் அம்பத்தூர் துணை ஆய்வாளர் ஈஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த தீவிர விசாரணையில், செந்தமிழ்ச் செல்வியின் உறவினரான, பக்கத்து வீட்டில் வசிக்கின்ற முன்னாள் ராணுவ வீரரான மீனாட்சி சுந்தரம் தான் 4 வயது சிறுமியை கொன்றுள்ளதாகத் தெரியவந்தது.

பின்பு போலீஸாரின் தீவிரமான விசாரணையில், மீனாட்சி சுந்தரம் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக தெரிவந்தது. இதன் பிறகு மீனாட்சி சுந்தரத்தை போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தற்போது தமிழகத்தில் பல பகுதிகளில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் எல்லையை பாதுகாக்கிற ராணுவ வீரரே, இரக்கமின்றி 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற செய்தி மக்களின் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுதியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்