நாங்கள் ஜியோ மாதிரி கிடையாது; குத்திக்காட்டிய வோடஃபோன்!

திங்கள், 14 அக்டோபர் 2019 (17:05 IST)
நாங்கள் மற்ற நிறுவனங்கள் போல இலவசம் என்று சொல்லிவிட்டு பணம் கேட்க மாட்டோம் என வோடஃபோன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக அனைத்து நெட்வொர்க்குகளும் அன்லிமிடெட் அழைப்புகளை அளித்து வந்த நிலையில், திடீரென ஜியோ நிறுவனம் தனது நெட்வொர்க்கிலிருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என அறிவித்தது. இதனால் இலவசம் என ஆசைப்பட்டு ஜியோ நெட்வொர்க்கிற்கு மாறிய பலரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மற்ற மொபைல் நெட்வொர்க்குகள் தங்களது இலவச சேவைகள் குறித்து விளம்பரம் செய்து வருகின்றன. சமீபத்தில் ஏர்டெல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய குறுந்தகவலில் ’இலவசங்களை நம்பி ஏமாறவேண்டாம். தொடர்ந்து ஏர்டெல்லுடன் இணைந்திருங்கள்’ என்று கூறியிருந்தன.

இந்நிலையில் தற்போது வோடபோன் செய்துள்ள விளம்பரத்தில் “அரசாங்க விதிமுறைகளின்படி மற்ற நெட்வொர்க்குகளுக்கு பேசும்போது நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்க வேண்டும். ஆனால் நீங்கள் உங்களுடைய அன்லிமிடெட் ப்ளான்களில் எப்போதும் எக்ஸ்ட்ரா கட்டணம் கட்ட வேண்டிய அவசியமில்லை. மற்ற சில நிறுவனங்களை போல வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்க மாட்டோம். இலவசம் என்றால் இலவசம்தான்!” என கூறியுள்ளனர்.

ஜியோவின் பைசா வசூல் நடவடிக்கையை குறிப்பிட்டு தொடர்ந்து வேறு சில நிறுவனங்களும் இதுபோன்ற விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்