ஸ்பைடர்மேன் சாதனையை முறியடித்த மார்வெல் ஏசுநாதர்! – Deadpool and Wolverine ட்ரெய்லர் நிகழ்த்திய சாதனை!

Prasanth Karthick

புதன், 14 பிப்ரவரி 2024 (15:42 IST)
மார்வெல் காமிக்ஸ்களில் பிரபலமான டெட்பூலின் புதிய படத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது.



உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட சூப்பர்ஹீரோ படங்களை மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த 2008ல் தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் மூலமாக இதுவரை 33 திரைப்படங்கள், 12 வெப் சிரிஸ் வெளியாகியுள்ளது. மார்வெல் காமிக்ஸில் பிரபலமான சூப்பர்ஹீரோக்களில் வுல்வரின் லோகனும், டெட்பூலும் முக்கியமானவர்கள்.

இவர்களது திரைப்படங்கள் முன்னதாக ஃபாக்ஸ் ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்களால் தனித்தனி படமாக எடுக்கப்பட்டிருந்தாலும் முதன்முறையாக MCU Phase ல் இருவரும் Deadpool and Wolverine படத்தின் மூலமாக அதிகாரப்பூர்வமாக இணைகின்றனர். மேலும் வுல்வரினாக பிரபலமான ஹ்யூ ஜாக்மேனே நடித்திருப்பது இந்த படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று முன் தினம் இந்த Deadpool and Wolverine படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியானது.



ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 36 கோடி பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்து இந்த Deadpool and Wolverine ட்ரெய்லர். முன்னதாக டோபி மெக்குரே, கார்ஃபீல்ட், டாம் ஹாலண்ட் என்று மூன்று பீட்டர் பார்க்கர் ஸ்பைடர்மேன்களும் தோன்றிய ‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோ’ படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 35.55 கோடி பார்வைகளை கடந்து அதிகமான பார்வைகளை ஒரே நாளில் பெற்ற ட்ரெய்லர் என சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை தற்போது மார்வெலின் ஏசுநாதர் (Marvel Jesus) என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட டெட்பூல் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த ட்ரெய்லரில் ஹ்யூ ஜாக்மேனின் வுல்வரின் கேரக்டர் காட்டப்படவில்லை. இந்த Deadpool and Wolverine திரைப்படம் ஜூலையில் வெளியாக உள்ள நிலையில் வுல்வரின் கேரக்டர் மே வாக்கில் வெளியாகும் ட்ரெய்லரில்தான் காட்டப்படும் என கூறப்படுகிறது. வுல்வரினை மீண்டும் காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாய் காத்திருக்கின்றனர். அப்போது வரும் அந்த ட்ரெய்லர் தற்போதைய ட்ரெய்லரின் சாதனையையே முறியடிக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்