ஷியாமளா கோபாலன்: கமலா ஹாரிஸின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எவ்வாறு?

வெள்ளி, 29 ஜனவரி 2021 (23:45 IST)
துணை அதிபர் கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன், அமெரிக்காவில் ஒரு விஞ்ஞானி, ஒரு ஆர்வலர் என பன்முகத் திறமைகள் கொண்ட பெண்மணியாக இருந்தவர். மகளின் வாழ்வில் ``மிகப் பெரிய தாக்கத்தை'' ஏற்படுத்தியவராகவும் அவர் இருந்தார். அவருடைய வாழ்க்கை குறித்து டெல்லியில் இருந்து கீதா பாண்டே, வாஷிங்டன் டி.சி.யில் இருந்து வினீத் காரே ஆகியோர் விவரிக்கின்றனர்.
 
துணை அதிபராக பதவி ஏற்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, அமெரிக்க அரசில் இரண்டாவது உயரிய பதவியை தாம் அடைவதற்கான பயணத்திற்கு வழிகாட்டியாக இருந்த பெண்மணிக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் மரியாதை செலுத்தினார்.
 
ட்விட்டரில் அவர் பதிவேற்றிய வீடியோவில், ``இன்றைக்கு நான் இந்த நிலைமைக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணமான பெண்மணி, என் தாயார் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
 
``அமெரிக்காவில் இதுபோன்ற தருணங்கள் சாத்தியம் தான் என்று அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.'' திருமதி ஹாரிஸ் அமெரிக்காவில் வரலாறு படைத்துள்ளார். கருப்பினத்தைச் சேர்ந்த மற்றும் தெற்காசிய அமெரிக்கரில் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற முதலாவது பெண்மணி என்ற வகையில் அவர் சரித்திரம் படைத்தார்.
 
ஆனால், தனது பெரும் கனவுகளுடன் 1958-ல் இந்தியாவில் இருந்து பயம் ஏதுமின்றி அமெரிக்காவுக்கு சென்ற அவருடைய தாயாரின் பயணத்தை அறியாமல், கமலா ஹாரிஸ் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துவிட முடியாது.
 
மக்கள் நிர்வாகத் துறை பணியில் உள்ள அப்பா, இல்லத்தரசியான தாயாரின் நான்கு பிள்ளைகளில் மூத்தவரான திருமதி கோபாலன், உயிரி வேதியல் (பயோகெமிஸ்ட்ரி) படிக்க விரும்பினார்.
 
ஆனால் டெல்லியில் லேடி இர்வின் கல்லூரியில், ஹார்டு சயின்ஸ் எனப்படும் கடினமான துறைகளில் பெண்களுக்கு இடம் தருவதில்லை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்தில் அந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. எனவே அவர் மனை அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டம் சேர வேண்டியதாயிற்று. அதில் சத்துணவு மற்றும் இல்ல மேலாண்மை திறன்கள் கற்பிக்கப்பட்டன.
 
``நானும் என் தந்தையும் அவரை சீண்டி விளையாடுவோம்'' என்று அவரது சகோதரர் கோபாலன் பாலச்சந்திரன் பிபிசியிடம் கூறினார்.
 
``அவரிடம் இன்று உனக்கு என்ன சொல்லிக் கொடுத்தார்கள்? டேபிளை எப்படி விரிப்பது என்றா? ஸ்பூனை எங்கே வைக்க வேண்டும் என்றா?' என்று கேட்போம். அவர் எங்கள் மீது கோபப்படுவார்'' என்று சொல்லி சிரிக்கிறார் அவர்.
 
 
ஷியாமளா கோபாலன் ``வழக்கத்திற்கு மாறுபட்டவர்'' என்று அவருடன் இளவயதில் ஒன்றாகப் படித்தவரும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தியரிட்டிக்கள் இயற்பியல் துறை கௌரவப் பேராசிரியருமான ஆர். ராஜாராமன் கூறுகிறார்.
 
40 பேர் படித்த தங்கள் வகுப்பில், மாணவர்கள் ஒரு புறமும், மாணவிகள் ஒரு புறமும் அமர்ந்திருந்தார்கள். இருவருக்கு இடையில் அதிகமான உரையாடல்கள் இருக்காது.
 
``ஆனால் மாணவர்களிடம் பேச ஷியாமளா தயக்கம் காட்டியது கிடையாது. உறுதியான மனநிலையுடன் இருப்பார்'' என்று அவர் நினைவுகூறுகிறார்.
 
``அந்தக் காலத்தில் பெண்களை திருமணத்துக்குத் தயார் செய்யும், நல்ல மனைவியாக இருக்கத் தயார் செய்யும் இடமாக'' கருதப்பட்ட லேடி இர்வின் கல்லூரிக்குச் செல்ல ஷியாமளா ஏன் முடிவு செய்தார் என்பது புரியாத விஷயமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
ஆனால் திருமதி கோபாலனின் லட்சியங்கள் வேறு மாதிரியாக இருந்தன.
 
அவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தார். அவருக்கு இடமும் கிடைத்தது.
 
``இதை அவராகவே தான் செய்தார். வீட்டில் யாருக்கும் இதுபற்றி தெரியாது'' என்று அவரது சகோதரர் தெரிவித்தார்.
 
``அவர் வெளிநாடு செல்வதில் தந்தைக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், அமெரிக்காவில் எங்களுக்கு யாரையும் தெரியாது என்பதால் அவர் கவலைப்பட்டார். ஆனால், அவரது கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து வெளிநாடு செல்ல சம்மதித்தார். ஷியாமளாவுக்கு கல்வி உதவித் தொகை கிடைத்தது. முதலாவது ஆண்டுக்கு உதவித் தொகை அளிக்க ஒப்புதல் வந்தது'' என்று அவர் தெரிவித்தார்.
 
எனவே 19-வது வயதில், ஷியாமளா கோபாலன் இந்தியாவில் இருந்து, இதுவரை சென்றிராத, யாரையும் அறிந்திராத ஒரு நாட்டுக்குப் புறப்பட்டார். அங்கு சத்துணவு மற்றும் உட்சுரப்பியல் துறையில் பிஎச்.டி. பட்டம் பெற்றார்.
 
தன்னைப் பற்றிய நினைவுகளாக The Truths We Hold என்ற புத்தகத்தில், திருமதி ஹாரிஸ் தன் தாயாரின் வாழ்க்கைப் பயணம் குறித்து எழுதியிருக்கிறார்.
 
``வெளிநாடு செல்ல தன்னை அனுமதித்தது பெற்றோருக்கு எவ்வளவு கஷ்டமானதாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
``வணிக ரீதியில் விமானப் பயணங்கள் அப்போதுதான் உலக அளவில் தொடங்கி இருந்தன. தொடர்பில் இருப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இருந்தாலும், கலிபோர்னியாவுக்குச் செல்ல என் தாயார் அனுமதி கேட்டபோது, என் தாத்தா பாட்டி அதைத் தடுக்கவில்லை'' என்றும் கூறியுள்ளார்.
 
அமெரிக்காவில் அப்போதைய காலம் ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
 
மக்கள் உரிமை போராட்டம் உச்சத்தில் இருந்தது. இன பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தின் மையமாக பெர்க்லி இருந்தது. மற்ற வெளிநாட்டு மாணவர்களைப் போல, ஷியாமளாவும், உலகில் அமெரிக்காவை நல்லதொரு நாடாக ஆக்கும் போராட்டத்தில் பங்கேற்றார்.
 
கமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபராகும் இந்திய வம்சாவளி பெண் - யார் இவர்?
கமலா ஹாரிஸ் வெற்றிக்கு பின்னால்: அன்பு அம்மா முதல் காதல் கணவர் வரை
இருந்தாலும், அந்த காலக்கட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் மக்கள் உரிமைப் போராட்டத்தில் பங்கேற்பது வழக்கத்திற்கு மாறான விஷயமாக இருந்தது.
 
``காலனி ஆதிக்கத்தின் அடக்குமுறையைப் புரிந்து கொண்டிருக்கும் சமூகத்தில் இருந்து வந்த காரணத்தால் தான், ஆப்பிரிக்க - அமெரிக்க மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் அவர் பங்கேற்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் என்று எனக்குத் தோன்றியது,'' என்று 1961-ல் வளாகத்தில் கேண்டீனில் அவரை முதலில் சந்தித்த மார்கோட் டேஷியெல் கூறினார்.
 
``இது பல தசாப்தங்களுக்கு முன்னர் நடந்தது. ஆனால், வெள்ளை இனத்தவர்களுக்குப் போராட்டங்கள் பற்றி, உரிமைகள் தருவது பற்றி புரிவதில்லை என்று அவர் என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அதுபற்றி நான் விளக்கமாகக் கேட்கவில்லை. ஆனால், நிற பாகுபாடு பிரச்னைகளை அனுபவித்த காரணத்தால் அவருக்கு இந்தக் கருத்து இருந்திருக்கும் என்று நினைத்தேன்'' என்றும் அவர் தெரிவித்தார்.
 
சேலை அணிந்து, குங்குமம் வைத்துக் கொண்டு வரும் ``சிறிய குட்டிப் பெண்'' என்று அவரை நண்பர்கள் குறிப்பிடுவார்கள். ``தெளிவாகப் பேசக் கூடிய, உறுதியுடன் செயல்படக் கூடிய, புத்திசாலித்தனமான'' செயல்பாடுகள் கொண்ட ``பிரகாசமான மாணவியாக'' இருந்தார் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
 
``அறிவார்ந்த ரீதியில் நம்பிக்கையுடன், ஆண்களுக்கு நிகராக செயல்பட்டு, உரையாடல்களில் சரிக்கு சமமாக பங்கேற்பது அவருக்கு கை வந்த கலையாக இருந்தது'' என்று டேஷியெல் தெரிவித்தார்.
 
``ஆணாதிக்கம் மிகுந்திருந்த அந்த காலக்கட்டத்தில், எங்கள் வட்டத்தில் மிகச் சில பெண்கள் மட்டுமே அந்த அளவுக்கு எளிதாகக் கையாளும் தன்மை கொண்டிருந்தனர்'' என்று அவர் குறிப்பிட்டார்.
 
ஆப்பிரிக்க - அமெரிக்க மாணவர்களுக்கு அவர்களின் வரலாற்றைக் கற்பிக்க 1962-ல் உருவாக்கப்பட்ட கருப்பின மாணவர்கள் கல்வி வட்டமாக இருந்த ``ஆப்பிரிக்க - அமெரிக்க சங்கத்தில் இருந்த ஒரே இந்திய, ஒரே ஆப்பிரிக்க அமெரிக்கர் அல்லாதவராக அவர் இருந்தார்'' என்றும் டேஷியெல் நினைவுகூறுகிறார்.
 
கருப்பினத்தவர்களுக்கு மட்டுமான வட்டத்தில் அவர் இடம் பெற்றிருப்பது பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை என்று அவ்பிரே லாபிரி கூறினார். பெர்க்லியில் 1962-ல் சட்டம் பயின்றபோது அவர் ஷியாமளாவை சந்தித்து, பிறகு நட்பு ஏற்படுத்திக் கொண்டவராக இவர் இருக்கிறார்.
 
``இந்த நாட்டில் மக்கள் உரிமைகள் இயக்கத்தின் வளர்ச்சியில் நாங்கள் எல்லோருமே ஆர்வம் கொண்டிருந்தோம். சொல்லப்போனால், மூன்றாம் உலக நாடுகளின் விடுதலை இயக்கங்களில் ஓர் அங்கமாக அது இருந்தது. இந்தக் குழுவில் அவர் இடம் பெற்றதற்கு அதுதான் அடிப்படைக் காரணமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் ஒரே மாதிரியான சகோதர சகோதரிகளாக, அதுபோன்ற இயக்கங்களுக்கு அறிவார்ந்த ரீதியில் ஆதரவு அளிப்பவர்களாக இருந்தோம்'' என்று அவர் கூறினார்.
 
``அவருடைய பின்னணி குறித்து யாரும் எந்தப் பிரச்னையும் எழுப்பவில்லை.கருப்பினத்தவருக்கான குழுவில், ஐரோப்பியர் பங்கேற்பதை அவர்கள் உள்ளுக்குள் ஆட்சேபித்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், அவர் இதில் பங்கேற்க வேண்டுமா, வேண்டாமா என்பதில் எப்போதும் எந்தப் பிரச்னை இருந்ததாக எனக்கு நினைவில்லை'' என்றும் அவர் தெரிவித்தார்.
 
``போராட்ட குணம், மக்கள் உரிமைகளுக்கான இயக்கங்களில் பங்கேற்றது ஆகியவை அவருடைய வாழ்க்கையின் பாதையை மாற்றிவிட்டன. கல்வியை முடித்ததும் என் தாயார் தாயகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, தன் பெற்றோரை போல அவருக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்றும், ``ஆனால் விதி வேறு மாதிரி இருந்தது'' என்றும் திருமதி ஹாரிஸ் எழுதியுள்ளார்.
 
1962-ல் ஜமைக்காவில் இருந்து பொருளாதார கல்விக்காக வந்த டொனால்ட் ஹாரிஸ் என்பவரை பெர்க்லியில் அவர் சந்தித்தார். இருவரும் காதல் கொண்டனர்.
 
கருப்பின மாணவர்கள் கூடிய ஒரு நிகழ்ச்சியில் ஹாரிஸிடம் சென்று ஷியாமளா தன்னை அறிமுகம் செய்து கொண்டார். ``ஆண்களும் பெண்களுமாக இருந்த அந்தக் கூட்டத்தில் தோற்றத்தில் மற்றவர்களைவிட தனித்துவமாக அவர் இருந்தார்'' என்று அண்மையில் நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் டொனால்ட் ஹாரிஸ் கூறியுள்ளார்.
 
``நீதிக்காகவும், மக்கள் உரிமை இயக்கத்திலும் அணி திரண்டு பங்கேற்றதில், பெரும்பாலான அமெரிக்கர்களைப் போல என் பெற்றோரும் காதல் கொண்டனர்'' என்று திருமதி ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
 
அமெரிக்காவில் இதுவரை இருந்த துணை அதிபர்களில் கமலா ஹாரிஸ் மிகவும் துடிப்பானவராக இருப்பார் என்று அவரது மாமா கோபாலன் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
 
அவர்கள் 1963-ல் திருணம் செய்து கொண்டனர். ஓராண்டு கழித்து 25வது வயதில் இருவரும் பிஎச்.டி. பட்டங்களைப் பெற்றனர். கமலாவும் பிறந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து மாயா பிறந்தார்.
 
தமிழ் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ஷியாமளா குடும்பத்தில், அவருடைய வெளிநாட்டு தொடர்பிலான திருமணத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், ``கோபாலன் ரத்த வாரிசுகள் வரிசையில் இருந்து விலகிவிட்டேன்'' என்று 2003-ல் ஷியாமளா கோபாலன் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொடர்பாக இருந்து வந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
``தனக்கு திருமணம் நடக்கப் போவதாக அவர் எங்களிடம் சொல்லவில்லை'' என்று பாலச்சந்திரன் தெரிவித்தார். ``அவரது பெற்றோருக்கு பெரிய ஆட்சேபம் எதுவும் இல்லை. ஆனால் மாப்பிள்ளையை சந்தித்தது இல்லை என்பது தான் அவர்களுடைய கவலையாக இருந்தது'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
ஒரு முறை ``கமலாவும், மாயாவும் தங்கள் பெற்றோரை உங்களுக்குப் பிடிக்கவில்லையா என தாத்தாவிடம் கேட்டிருக்கிறார்கள்.'' அதற்குப் பதில் அளித்த அவர், ``உங்கள் அம்மாவுக்கு அவரைப் பிடித்திருக்கிறது. அவரிடம் கெட்ட பழக்கங்கள் இல்லை. எனவே அவரை பிடிக்காமல் போக என்ன காரணம் இருக்கிறது என்று கூறினார்'' என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 
 
ஷியாமளாவின் பெற்றோர் முதன்முறையாக தங்கள் மருமகனை 1966-ல் சந்தித்தனர். திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் கழித்து அந்த சந்திப்பு நடந்தது. ஷியாமளாவின் தந்தை பணியில் நியமிக்கப்பட்ட ஜாம்பியாவில் அந்த சந்திப்பு நடந்தது.
 
திருமண உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. கமலாவுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, ஷியாமளா தம்பதியினர் பிரிந்துவிட்டனர். விடுமுறை காலங்களில் கமலாவும், மாயாவும் தந்தையின் இடத்துக்கு சென்று வருவார்கள் என்றாலும், இருவரையும் ஷியாமளா தான் வளர்த்து வந்தார்.
 
கடந்த ஆண்டு, துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வந்தபோது, தனியொரு பெண்ணாக தமது தாயாரின் பங்களிப்பு குறித்து கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். மகள்களை கவனித்துக் கொண்ட அதே நேரத்தில், புற்றுநோய் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு நாள் முழுக்க உழைத்தவர் என்று அவர் குறிப்பிட்டார்.
 
தனது 70வது வயதில் 2009 பிப்ரவரியில் ஷியாமளா கோபாலன் பெருங்குடல் புற்றுநோய் காரணமாக காலமானார். மார்பகப் புற்றுநோயில் ஹார்மோன்களின் பங்கு குறித்த முக்கிய உண்மைகளைக் கண்டறிந்தவர் என்ற வகையில் உலகெங்கும் அவர் அறியப்பட்டுள்ளார்.
 
கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட போது, அவருடைய முன்னோர்கள் வாழ்ந்த இந்திய கிராமத்தில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
YouTube பதிவை கடந்து செல்ல, 2
 
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
YouTube பதிவின் முடிவு, 2
அவர் பெர்க்லியில் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் புற்றுநோய் ஆய்வகத்தில் பணியாற்றினார். பிரான்ஸ், இத்தாலி, கனடா நாடுகளுக்கு சென்றுவிட்டு, தன் பணியின் கடைசி தசாப்தத்தில் கலிபோர்னியாவில் லாரன்ஸ் பெர்க்லி ஆய்வகத்துக்கு வந்தார்.
 
``அவர் மிகவும் தீவிர செயல்பாடு உள்ள விஞ்ஞானி, கலந்துரையாடல்களின் போது அறிவியல் ரீதியிலான கருத்துகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பவர்'' என்று லாரன்ஸ் பெர்க்லி ஆய்வகத்தில் அவருடைய மேலதிகாரியாக இருந்த விஞ்ஞானி ஜோ கிரே தெரிவித்தார்.
 
தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது குறித்து திறந்த மனதுடன் இருந்தார் என்று அவர் கூறினார்.
 
அவருக்குப் புற்றுநோய் பரவத் தொடங்கியதும், இந்தியாவுக்கு திரும்பிவிட தனது சகோதரி முடிவு செய்தார், வாழ்வின் இறுதிக் காலத்தை தாயார் மற்றும் சகோதரியுடன் கழிக்க விரும்பினார் என்று பாலச்சந்திரன் குறிப்பிட்டார். ஆனால் அவருக்கு அந்தப் பயணம் அமையாமலே போய்விட்டது. தாம் பிறந்த நாட்டுக்குத் திரும்புவதற்கு திட்டமிட்டிருந்த தன் நண்பருடன் கடைசியாக நடந்த உரையாடலை லாபிரி நினைவுகூர்ந்தார்.
 
``வாழ்வின் அந்தக் கட்டத்தில் தன் குடும்ப பாரம்பர்யத்துடன் தொடர்பில் இருப்பது அன்பை தேடும் உணர்வு என்று நான் நினைத்தேன்'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
``எல்லா விஷயங்களும் இருந்தாலும் `ஷியாமளா நீ இந்தியாவுக்கு திரும்பிச் செல்வதைக் கேட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது' என்று கூறினேன். அவர் `அவ்பிரே, நான் எங்கேயும் போகவில்லை' என்று கூறினார். அதன்பிறகு சீக்கிரத்தில் அவர் மரணித்துவிட்டார்'' என்று அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்