ஒட்டக பாலில் டீ கேட்டு கடை ஊழியர்களைத் தாக்கிய புதுச்சேரி இளைஞர்கள் கைது

வியாழன், 5 நவம்பர் 2020 (16:08 IST)
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!! தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

புதுச்சேரியில் மது போதையில் ஒட்டகப்பாலில் டீ கேட்டு கடை ஊழியர்களைத் தாக்கிய மூன்று இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன், இவர் அரியாங்குப்பத்தில் கடலூர் - புதுச்சேரி பிரதான சாலையில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த 3 பேர், ஒட்டகப் பாலில் டீ கேட்டுள்ளனர்.

அதற்கு ஒட்டகப் பால் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்த பின்னர், ஏன் இல்லை என்று கேட்டுக் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மது போதையிலிருந்த 3 பேரும் திடீரென ஆத்திரமடைந்து கடையிலிருந்த பொருட்களை உடைத்துள்ளனர். அப்போது அவர்களைத் தடுக்க முயன்ற ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.

பிறகு கடை ஊழியர்கள் அவர்களை பிடிக்க முயன்ற போது 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் நாராயணன் புகார் தெரிவித்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், பேக்கரியில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் கூறுகையில், "மது போதையிலிருந்த மூன்று பேரும் கடை மாறி பேக்கரியில் ஒட்டகப் பாலில் டீ கேட்டு தகராறு செய்துள்ளனர். அந்த பேக்கரிக்கு எதிரே ஒட்டகப் பால் விற்கும் மற்றொரு கடை உள்ளது. ஆனால் இவர்கள் மூவரும் குடி போதையில் கடை மாறி பேக்கரிக்கு சென்று, ஒட்டகப் பால் கேட்டு ஊழியர்களைத் தாங்கி அங்கிருந்த பொருட்களைச் சேதப் படுத்தியுள்ளனர். தற்போது அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார்.

"தமிழக சட்டமன்ற தேர்தலில் நல்லவர்களுடன் கூட்டணி" - கமல் ஹாசன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நல்லவர்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கட்சியின் அரசியல் உத்தி எதுவாக இருக்கும் என்று கேட்டபோது, "பழிபோடும் அரசியலாக இல்லாமல், வழிகாட்டும் அரசியலாக இருக்கும் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.

கடந்த சில மாதங்களில் ஒரு லட்சம் பேர் மக்கள் நீதி மய்யத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர். கட்சியின் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்