“நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று தெரியாது" - இந்திய வெளியுறவு அமைச்சகம்

வெள்ளி, 6 டிசம்பர் 2019 (18:16 IST)
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாஸ்போட்டுக்கு அவர் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் வெளியுறவு துறை வழங்கும் செய்தியாளர் சந்திப்பில், நித்யானந்தா பற்றி ரவீஷ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
நித்யானந்தா பல வழக்குகளில் தேடப்படுவதால், வெளிநாடுகளிடமும், தூதரகங்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கிறோம் என்று ரவீஷ் குமார் கூறினார்.
 
"எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை முதலாக கொண்டே நாங்கள் செயல்பட முடியும். இதுவரை நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று எங்களுக்கு தெரிய வரவில்லை. அவ்வாறு தெரிய வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்" என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, தன்னை இந்து சாமியார் என அழைத்து கொள்ளும் சர்ச்சைக்குரிய நித்தியானந்தா தனி நாடு அறிவித்து, கொடி, துறைகள் ஆகியவற்றையும் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
 
நித்யானந்தா தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவர் உள்நாட்டில் இருக்கிறாரா? வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டாரா என்பதுகூட உறுதியாகத் தெரியவில்லை.
 
நித்யானந்தா தேடப்படுவது ஏன்?
 
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளை கடத்தி சென்றதாக அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அகமதாபாத் டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் இருந்த அவரது ஆசிரமம் மூடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அவர் இந்துக்களுக்கு என்று தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
 
'கைலாசா' என்று அவர் தமது நாட்டுக்குப் பெயர் வைத்துள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. தாம் அமைத்துள்ளதாக நித்யானந்தா குறிப்பிடுகிற நாட்டுக்கான 'அதிகாரபூர்வ' இணைய தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
 
https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத, உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் கைலாசா இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டது என்றும், இந்து ஆதி சைவர் சிறுபான்மை சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்