கமல் ஹாசன்: 'சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் வெறும் பெட்டி செய்தியல்ல'

புதன், 18 டிசம்பர் 2019 (19:54 IST)
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்.

டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை சந்தித்தபின் செய்தியாளர்களைப் பேசிய கமல், "இந்த மாணவர்களின் போராட்டம் வெறும் பெட்டிச் செய்தியுடன் அடங்கிவிடக் கூடாது. மாணவர்களை அகதிகளாக முயன்று வருகின்றனர். இந்த மாணவர்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது இந்திய மற்றும் தமிழக அரசின் கடமை," என்றார்.

"என்னை நீங்கள் யார் எனக் கேட்காதீர்கள்? நானும் நிரந்தர மாணவன்தான். மாணவர்களின் கேள்விக்குப் பதில் அளியுங்கள்," என்றார் கமல்.

"இது ஜல்லிக்கட்டுக்கு அப்பாற்பட்ட விஷயம். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட விஷயம். நான் கட்சித் தலைவனாக வரவில்லை. உங்களுக்கு அரணாக வந்திருக்கிறேன்," என்றார்.

"நான் தடி ஊன்றி இங்கே வந்திருக்கிறேன். ஜனநாயகமும் இப்போது அப்படித்தான் இருக்கிறது" என்றும் தெரிவித்தார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமல், "பாகிஸ்தான் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை இலங்கை இந்துவுக்கு ஏன் இல்லை?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

கிராமங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து செத்து கொண்டிருக்கும்போது அதைத் தடுக்க வழிசெய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது அரசின் சூழ்ச்சி என்றும் பெண்கள் உயிர் பயத்தில் வாழும் நேரத்தில் அதைச் சரிசெய்யாமல், வாக்கு வங்கிக்காக சட்டப்பிழைகளைச் செய்வது அரசு மக்களுக்கு எதிராகத் தொடக்கும் போர் என்றும் கமல்ஹாசன் குற்றம்சாட்டி இருந்தார் கமல்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்