பிரிட்டனில் இருந்து விமானங்கள் வருகை, புறப்பாடுக்கு இந்தியா திடீர் தடை

செவ்வாய், 22 டிசம்பர் 2020 (17:04 IST)
நாவல் கொரோனா வைரஸின் புதிய வடிவம் பிரிட்டனில் அதிக தொற்றுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.
 
அயர்லாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை நிறுத்தியுள்ளன.
 
இதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 22 முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. இந்த கால கட்டத்தில் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
 
தடை கட்டுப்பாடுக்கு முன்பே பிரிட்டனில் இருந்து பயணிகள் இந்தியாவுக்கு ஒருவேளை வருகை தந்திருந்தால், அவர்கள் ஆர்டிபிசிஆர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் இந்திய அரசு கூறியுள்ளது.
 
இந்தியாவை போலவே, குவைத் அரசும் பிரிட்டனுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் டிசம்பர் 31ஆம் தேதிவரை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து எந்தவொரு விமானமும் தங்கள் நாட்டுக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத் விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்