பெய்ரூட் வெடிப்பு: அரசாங்க கட்டடங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள்

ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (15:23 IST)
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிப்பு நிகழ்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158ஆக அதிகரித்துள்ள நிலையில், அரசு அலட்சியமாக செயல்பட்டதாக கூறி தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, பெய்ரூட்டிலுள்ள அரசுத்துறை அலுவலகங்கள் போராட்டகாரர்களால் சூறையாடப்பட்டன.

பெய்ரூட்டின் முக்கிய தெருக்களில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளாக பங்கேற்றனர். அப்போது தங்களை தடுக்க முயன்ற காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சியில் ஈடுபடவே சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை காவல்துறையினர் வீசினர்.

இதுமட்டுமின்றி, நகரின் சில பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சத்தங்களும் கேட்டன.

போராட்டங்களின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய லெபனான் பிரதமர் ஹசன் தியாப், இந்த குழப்பமான சூழ்நிலையிலிருந்து வெளிவர முன்கூட்டியே தேர்தலை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.


"முன்கூட்டியே தேர்தலை நடத்தாமல் நாட்டில் நிலவும் இந்த நெருக்கடி நிலையிருந்து நம்மால் வெளியே வர முடியாது" அவர் கூறினார். இதுதொடர்பாக நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள லெபனானின் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தின் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,000 டன்களுக்கும் அதிகமான அம்மோனியம் நைட்ரேட் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு மிகப்பெரிய வெடிப்புக்கு காரணமானது. இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கும், கட்டடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்ததற்கும் அரசின் அலட்சியமே காரணமென்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த வெடிப்புக்கு காரணாமான அம்மோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளுக்கு முன்பு கப்பலொன்றிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டும் ஏன் அங்கிருந்து வேறு இடத்துக்கு எடுத்துச்செல்லப்படவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இதையடுத்து, இந்த பிரச்சனைக்கு காரணமானவர்கள் கண்டறியப்படுவார்கள் என்று அந்த நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.

துறைமுகத்தில் நடந்த வெடிப்பு நிகழ்வு பெய்ரூட் நகரின் சில பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தியதுடன், திறமையற்ற மற்றும் ஊழல் நிறைந்த அரசியல் சூழ்நிலை நாட்டில் நிலவுவதாக பலர் ஏற்கனவே கொண்டிருந்த அவநம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்