அபூர்வி சண்டேலா: டோக்கியோ ஒலிம்பிக்சில் பிரகாசிக்க காத்திருக்கும் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை

ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (15:41 IST)
அபூர்வி சண்டேலா முதன்முறையாக 2016ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்றார். ஆனால் தான் நினைத்த அளவிற்கு அவரால் போட்டியில் சாதிக்க முடியவில்லை. இருப்பினும் அந்த அனுபவம் தனக்கு சிறந்த பாடமாக அமைந்தது என்று அவர் தெரிவிக்கிறார்.

அந்த ஏமாற்றத்திலிருந்து வெளிவந்து 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதற்கு அடுத்த ஆண்டு அதனைவிட பெரும் சாதனையை நிகழ்த்தினார் சண்டேலா. டெல்லியில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்தார். அது அவருக்கு 2021ஆம் அண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பையும் பெற்று தந்தது.

மதிப்பிற்குரிய அர்ஜுனா விருதை 2016ஆம் ஆண்டு பெற்ற சண்டேலா, இந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெரும் சாதனை புரிய வேண்டும் என்று விரும்புகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி டோக்கியோவில் தான் அபாரமாக விளையாடவிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

குடும்பத்தின் ஆதரவு

துப்பாக்கிச் சுடுதல் ஒரு செலவு மிகுந்த விளையாட்டு என்றாலும், ஜெய்பூரை சேர்ந்த அபூர்வியின் குடும்பம் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்தது.

சண்டேலாவின் தாய் கூடைப்பந்து வீராங்கனை. அபூர்வியின் உறவினர் ஒருவரும் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் உள்ளார். தனது குழந்தைப் பருவத்திலேயே விளையாட்டு குறித்த விவாதங்களை கேட்டு வளர்ந்ததால், முதலில் பத்திரிக்கைத்துறையில் விளையாட்டுப் பிரிவு குறித்து பயில வேண்டும் என அவர் விரும்பினார்.

இருப்பினும் 2008ஆம் ஆண்டு இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதை பார்த்து தானும் துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினார். பிந்த்ராவின் வெற்றி, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது சண்டேலாவுக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது.

தொடக்கத்திலிருந்து சண்டேலாவின் குடும்பம் அவருக்கு பெரும் ஆதரவு வழங்கி வருகிறது. துப்பாக்கி சுடுதலில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்த அவரின் தந்தை குல்தீப் சிங் சண்டேலா அபூர்விக்கு துப்பாக்கி ஒன்றை பரிசளித்ததில் அபூர்வியின் பயணம் தொடங்கியது.

பயிற்சியின் ஆரம்ப நாட்களில் அருகாமையில் உள்ள துப்பாக்கி சுடுதல் வசதி கொண்ட இடத்திற்கு செல்ல 45 மணி நேரம் ஆகும். எனவே நெடு நேரப் பயணம் அபூர்வியின் நேரத்தை வீணடிக்கிறது என்பதை உணர்ந்த அவரின் பெற்றோர் அவருக்கு வீட்டிலேயே துப்பாக்கி சுடுதல் பயிற்சி வசதியை செய்து கொடுத்தனர்.

அபூர்வியின் விளையாட்டிற்கு தேவையான நிதியை அவரின் தந்தை கவனித்துக் கொள்ள, அவரின் தாய் போட்டிகளில் அவருக்கு துணையாக சென்றார். தன்னோடு தன் தாய் வந்தது தனக்கு பெரும் பலத்தை தந்ததாக கூறுகிறார் அபூர்வி.

உயர் இலக்கை அடைதல்

அனைத்திந்திய பள்ளிகளுக்கான துப்பாக்கிசுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றபின் அபூர்வி தேசிய அளவில் தடம் பதித்தார். அதன்பின் மூன்றே வருடங்களில் சீனியர் அளவிலான தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் வெற்றி கொண்டார்.

2012 - 2019ஆம் ஆண்டுகளில் தேசிய அளவில் 6 முறை பதக்கங்களை வென்றுள்ளார் அபூர்வி. அதேசமயம் சர்வதேச நிகழ்ச்சிகளிலும் தடம் பதித்தார்.

2014ஆம் ஆண்டு க்ளாஸ்கெளவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதுதான் தனக்கு மறக்க முடியாது ஒன்று என்கிறார் அபூர்வி. அந்த போட்டியை காண தன் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் வந்திருந்ததால் அந்த வெற்றித் தருணம் தன் மனதில் நீங்காமல் என்றும் இருக்கும் என்கிறார் அபூர்வி.

(அபூர்வி சண்டேலாவிற்கு பிபிசி அனுப்பிய மின்னஞ்சலுக்கு கிடைத்த பதில்களை கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்