7.4 கிலோ சிறுநீரகம்: வெற்றிகரமாக அகற்றிய டெல்லி மருத்துவர்கள்

செவ்வாய், 26 நவம்பர் 2019 (21:57 IST)
நோயாளி ஒருவர் உடலில் இருந்து 7.4 கிலோ எடையுள்ள சிறுநீரகத்தை டெல்லி மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தோராயமாக பிறந்த குழந்தைகள் இருவரின் எடைக்கு சமம் இது.
பொதுவாக, மனித சிறுநீரகம் 120 முதல் 150 கிராம் எடை இருக்கும். எனவே, இந்தியாவில் மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட மிக பெரிய சிறுநீரகம் இது என நம்பப்படுகிறது.
 
சிறுநீரகம் முழுவதும் நீர்கட்டிகள் (cysts) உருவாக காரணமாகிற 'ஆட்டோஸோமல் டொமினன்ட் பாலிசிஸ்டிக்' என்று அழைக்கப்படும் சிறுநீரக நோயால் இந்த நோயாளி துன்பப்பட்டு வந்தார்.
 
இந்த நோய் தாக்கியவர்களின் சிறுநீரகம் பொதுவாக மிகப் பெரியதாகிவிடும் என்று இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
 
டெல்லியிலுள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் சச்சின் கதுரியா இது பற்றி கருத்து தெரிவிக்கையில், "உடலில் குறைந்தபட்சம் சிறிதளவு சுத்திகரிப்பு செயல்பாடுகளையாவது மேற்கொள்ளும் என்பதால், நோய் தொற்று மற்றும் உள் இரத்தப்போக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் சிறுநீரகத்தை மருத்துவர்கள் அகற்றுவதில்லை" என்றார்.
 
"ஆண்டிபயாடிக் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நோய் தொற்று இந்த நோயாளிக்கு ஏற்பட்டிருந்தது. சிறுநீரகம் மிகப் பெரிதாகிவிட்டதால் இந்த நோயாளிக்கு மூச்சுத்திணறல் உருவானது. எனவே அதனை அகற்றுவது தவிர வேறுவழி இருக்கவில்லை" என்று சச்சின் கதுரியா தெரிவித்தார்.
 
"அறுவை சிகிச்சை செய்தபோது இந்த சிறுநீரகம் மிகப் பெரிதாக இருக்கும் என்று மருத்துவர்கள் எண்ணியிருந்தாலும், இவ்வளவு பெரிய சிறுநீரம் இருந்தது, மருத்துவர்களையே ஆச்சரியமடைய செய்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
 
"இந்த நோயாளியின் இன்னொரு சிறுநீரகம் சாதாரணமாக இருப்பதைவிட பெரியதாகவே இருந்தது" என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
கின்னஸ் உலக சாதனைப் பதிவில் இதுவரை அதிக எடையுடைய சிறுநீரகம் 4.5 கிலோ என்று இருக்கிறது. ஆனால், இதனை விட அதிக எடையுள்ள சிறுநீரகங்கள் இருந்துள்ளதாக சிறுநீரகவியல் சஞ்சிகைகள் குறிப்பிடுகின்றன. அமெரிக்காவில் 9 கிலோ எடையும், நெதர்லாந்தில் 8.7 கிலோ எடையும் கொண்டிருந்த சிறுநீரகங்கள் இருந்ததாக இப்படிப்பட்ட குறிப்புகள் உள்ளன.
 
"தாங்கள் அகற்றியுள்ள சிறுநீரகத்தை கின்னஸ் சாதனைக்கு சமர்பிப்பது குறித்து மருத்துவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இது பற்றி விவாதித்து வருகிறார்கள்" என்று கதுரியா மேலும் தெரிவித்தார்.
 
பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பொதுவாக பரம்பரை காரணங்களால் வரக்கூடியது என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை இணையதளம் குறிப்பிடுகிறது. 30 முதல் 60 வயதான நோயாளிகளுக்கு இதனால் பிரச்சனைகள் ஏற்படும்.
 
சிறுநீரகத்தின் செயல்பாடுகள் சீர்குலைய காரணமாகும் இந்த நோய் இறுதியில் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்