ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம்; 1000 பேர் பலி!

ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (12:41 IST)
ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஷராபாத் மாகாணத்திற்கு வடமேற்கு நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 மற்றும் 6.3 க்கு உட்பட்ட வெவ்வேறு அளவுகளில் தொடர்ச்சியாக எட்டு முறை ஏற்பட்டுள்ளது

இதனால் ஆப்கானிஸ்தானின் கோரயான் மற்றும் சிந்தாஜன் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள் இடிந்து விழுந்ததாலும், நிலச்சரிவுகளாலும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிப்படைந்த பகுதிகளில் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு அறிவித்துள்ளது. மேலும் பல பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதைத்தொடர்ந்து ஏராளமான மக்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்