அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸும், டொனால்டு ட்ரம்ப்பும் நேரடி விவாதத்தில் பங்கேற்று ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதிபர் வேட்பாளர்களான டொனல்டு ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஏபிசி செய்தி ஊடகம் நடத்திய நேருக்கு நேர் விவாதத்தில் இருவரும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய கமலா ஹாரிஸ் “அமெரிக்காவுக்கு நெருக்கடியான இந்த காலகட்டத்தில் சரியான தலைவர் தேவைப்படுகிறது, மக்களின் பிரச்சினைகள் பற்றி ட்ரம்ப் பேசவே மாட்டார். அவருக்கு அரசியலமைப்பு மீது நம்பிக்கை கிடையாது. ட்ரம்ப்பே ஒரு குற்றவாளிதான். ஆனால் அமெரிக்காவில் குற்றங்களை குறைப்பது குறித்து அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. ட்ரம்ப் மீண்டும் அதிபரானால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்து விடுவார்” என பேசியுள்ளார்.
கமலா ஹாரிஸ் மீது குற்றச்சாட்டுகளை தொடுத்து பேசிய டொனால்ட் ட்ரம்ப் “கொரோனா தொற்றை ஒரு அதிபராக சிறப்பாக நான் கையாண்டேன். அமெரிக்காவிற்கு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். பைடன் ஆட்சியில்தான் மக்கள் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்.
கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவரிடம் நாட்டு முன்னேற்றத்திற்கு எந்த திட்டமும் இல்லை. நமது பொருளாதாரத்தை அவர் சீர்குலைத்து விட்டார். மாணவர்களுக்கு போலி வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார்கள். முக்கியமான விஷயங்களில் இரட்டை நிலைபாடு எடுத்தார்கள். அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டு விடும். கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K