’அமெரிக்க டாலர்களை பயன்படுத்த மாட்டோம்’ – ட்ரம்புக்கு ஈரான் பதிலடி
செவ்வாய், 31 ஜனவரி 2017 (18:55 IST)
ஈரான் நாட்டு மக்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதித்ததை அடுத்து, இனி அமெரிக்க டாலர்களை பயன்படுத்த மாட்டோம் என கூறி ஈரான் நாடு அதிரடியாக அறிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரான், ஈராக் உள்பட 7 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோர் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், ஈரான் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைகளில் இனி மேல் அமெரிக்க டாலர் பயன்படுத்தப்பட மாட்டாது. இதற்கு மாற்றாக வேறு பொதுவான வெளிநாட்டு நாணயம் பயன்படுத்தப்படும்.
ஈரான் நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 21 ஆம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.