போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளான, சிரியா, ஈராக், ஏமன், துருக்கி, லிபியா போன்ற நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று குடியேற ஆபத்தான கடல்வழிப் பயணத்தை மேற்கொண்டு உயிரிழந்து வருகின்றனர்.
அதேபோல், கடந்த வியாழக்கிழமை, லிபியாவில் இருந்து இரண்டு மீன் பிடி படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகளில் இத்தாலிக்கு செல்ல முயன்றனர். அப்போது படகு விபத்து ஏற்பட்டது. அதில் 45 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் 75 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 550 அகதிகளின் நிலை என்னவென்றே தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அந்த சம்பவத்தின் போது, ஒரு ஜெர்மானிய நாட்டை சேர்ந்த ஒரு மீட்புக் குழு அதிகாரி ஒருவர் தன்னுடைய கைகளில், ஒரு வயதுடைய இறந்து போன குழந்தையின் சடலத்தை வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபற்றி அந்த அதிகாரி மார்ட்டின் கூறும்போது “கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த குழந்தையின் பிஞ்சுக் குழந்தையின் கைகளை பிடித்து தூக்கி அரவணைத்துக் கொண்டேன். அந்த குழந்தையின் கண்களில் எந்த அசைவும் இல்லை. 6 மணி நேரத்திற்கு முன்பு அந்த குழந்தை கண்டிப்பாக உயிருடன் இருந்திருக்க வேண்டும்” என்று உருக்கமாக கூறினார்.