தி கோட் முதல் தங்கலான் வரை.. இந்த ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள்!

Prasanth Karthick

திங்கள், 16 டிசம்பர் 2024 (14:53 IST)

இந்த 2024ம் ஆண்டின் தொடக்கமே பெரிய பட்ஜெட் தமிழ் படங்கள் ஏதும் வராவிட்டாலும், பிற்பாதியில் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்துள்ளன.

 

தமிழ் சினிமாவிற்கு இந்த 2024ம் ஆண்டு ஒரு கலவையான, கரடு முரடான ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே பெரிய பட்ஜெட் தமிழ் படங்கள் ஏதும் வராத நிலையில் மஞ்ஞுமெல் பாய்ஸ், பிரேமலு என மலையாள படங்கள் இங்கு பெரும் ஹிட் கொடுத்து வந்தன. ஆனால் மே மாதத்திற்கு பிறகு தி கோட், வேட்டையன், இந்தியன் 2 என அடுத்தடுத்து பல பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகின. அதில் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களை பார்க்கலாம்.

 

10. லப்பர் பந்து
 

 

கெத்து தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் லப்பர் பந்து. ஓடிடி ரிலீஸுக்கு பிறகும் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிய இந்த படம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் (5 கோடி) எடுக்கப்பட்டு மொத்தமாக ரூ.44.36 கோடி வசூல் செய்துள்ளது.

 

09. தங்கலான்
 

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான படம் தங்கலான். விக்ரம் இந்த படத்திற்காக கடும் உழைப்பை கொடுத்திருந்தபோதும் அந்த கதையின் தன்மை பார்வையாளர்களால் பொருத்திக் கொள்ள முடியாததால் சுமாரான வரவேற்பையே பெற்றது. ரூ.70 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ரூ.80 கோடி வரை வசூலித்தது.

 

08. அரண்மனை 4
 

 

சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் அரண்மனை 4. முந்தைய அரண்மனை படங்களை போலவே பேய், காமெடி, க்ளாமர் என சகல மசாக்களும் கலந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியது.

 

07. கங்குவா
 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் கங்குவா. இந்த படம் வெளியான நாள் முதலே எதிர்மறை விமர்சனங்கள் இருந்து வந்தாலும், கூட்டமும் முதல் வாரத்தில் அதிகளவு இருந்தது. ஆனால் அதன்பின்னர் முற்றிலுமாக வரவேற்பை இழந்தது. ரூ.300 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இந்த படம் உலக அளவில் ரூ.106.41 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.

 

06. இந்தியன் 2
 

 

கமல்ஹாசன் - ஷங்கர் காம்பினேஷனில் நீண்ட ஆண்டுகள் கழித்து உருவான படம் இந்தியன் 2. படப்பிடிப்பின்போதே இந்த படத்திற்கு பல சறுக்கல்கள். அதை மீறி முழுவதுமாக தயாராகி வெளியான படம் மக்களை ஈர்க்க தவறியது. சுவாரஸ்யமற்ற திரைக்கதையாக்கத்தால் ரூ.200 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.140 கோடியே வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது

 

05. ராயன்
 

தனுஷே நடித்து, இயக்கி வெளியான படம் ராயன். ஒரு சாதாரண மனிதனின் பாசம், துரோகம், பழி வாங்குதல் போன்ற உணர்வுகளை கொண்டு உருவான ராயன், அதீத வன்முறை காட்சிகளால் ஏ சான்றிதழ் பெற்றது. திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்று ரூ.154 கோடி வசூலித்த ராயன், ஓடிடியில் வெளியானபோது விமர்சனங்களை சந்தித்தது.

 

04. மகாராஜா
 

 

நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘மகாராஜா’ விஜய் சேதுபதிக்கும் 50வது படமும் கூட. சின்ன கதை, பெரிய பட்ஜெட் இல்லாமல் சுவாரஸ்யமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் உண்டான இந்த படத்திற்கு தியேட்டர், ஓடிடி என எல்லா இடத்திலும் சிறப்பான வரவேற்பு. ரூ.40 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ.165 கோடி வசூலை எட்டிப்பிடித்தார் இந்த மகாராஜா. தற்போது சீனாவில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு மீண்டும் வசூல் கணக்கு அதிகரித்து வருகிறது.

 

03. வேட்டையன்
 

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராணா, அமிதாப் பச்சன் என பலர் நடித்து பேன் இந்தியா அளவில் வெளியான படம் வேட்டையன். வலுவான சமூக கருத்துகள் கொண்ட கதைகளமாக இருந்தபோதும் ரூ.200+ கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.253 கோடியை வசூலித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

 

02. அமரன்
 

 

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வெளியான படம் அமரன். ராணுவ வீரர் முகுந்த வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிய இந்த படம் ஓடிடி ரிலீஸுக்கு பிறகும் திரையரங்குகளில் கொண்டாடப்படு வருகிறது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.330 கோடி உலகளவில் வசூலித்துள்ளது. சிவகார்த்திகேயனின் ஆல் டைம் ரெக்கார்ட் கலெக்‌ஷனாக இது அமைந்துள்ளது.

 
  1. தி கோட்
     

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் தி கோட். இதற்கு பிறகு இன்னும் ஒரு படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து விடைபெறுவதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப இந்த படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலை கண்டது. ரூ.350 கோடி செலவில் உருவாகி ரூ.455 கோடிக்கும் மேல் வசூலித்து இந்த ஆண்டின் டாப் வசூல் படங்களில் முதல் இடத்தில் உள்ளது ‘தி கோட்’

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்