மகாராஷ்டிராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் பலவும் கொதித்து எழுந்துள்ளது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 325 வருடங்களுக்கு முன்னால் இறந்து போன முகலாய மன்னர் மேல் திடீரென மக்கள் கோபம் கொள்வது எதனால்?
சமீபத்தில் விக்கி கௌஷல் நடித்து வெளியான Chhaava படத்தின் தாக்கம் தான் இந்த போராட்டங்களுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. மராத்திய மக்களின் வீர நாயகனாக, பேரரசனாக விளங்குபவர் சத்ரபதி சிவாஜி. அவருக்கும் அவுரங்கசீப்பிற்கும் உள்ள வரலாற்று மோதல்தான் இன்று அவுரங்கசீப் கல்லறை மீதான வெறுப்புக்கும் காரணமாக அமைந்துள்ளது. அதுகுறித்து காண்போம்.
17ம் நூற்றாண்டில் மிகச்சிறப்பு வாய்ந்த மன்னராகவும், மராத்திய சாம்ராஜ்யத்தை நிறுவியவருமாக இருந்தவர் சத்ரபதி சிவாஜி மகாராஜ். அதேசமயம் வடக்கில் முகலாயர்களின் ஆதிக்கம் கோலோச்சியிருந்தது. முகலாய பேரரசரான ஷா ஜஹானின் மகனான அவுரங்கசீப் 1658ல் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னரானார். அவுரங்கசீப் இஸ்லாமிய நெறிமுறைகளில் கெடுபிடியானவர். மும்தாஜுக்கு தாஜ்மஹால் கட்டியதற்காக தனது தந்தை ஷாஜகானையே சிறை வைத்தார் என்கிறது வரலாறு.
மேலும் அவுரங்கசீப் ஆட்சியில் முகலாய படைகள் தொடர்ந்து மராத்திய சாம்ராஜ்யம் மீதும், ராஜபுத்திர சிற்றரசுகள் மீது போரை நடத்தி வந்தது. 1665ல் முகலாய படைக்கும், மராத்திய படைக்கும் இடையே ஏற்பட்ட புரந்தர் உடன்படிக்கை போரை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆனால் அதன் விளைவுகளை மராத்தியர்கள் எதிர்கொள்ள நேரிட்டது.
1680ல் சிவாஜி மகாராஜ் இறந்தபோது அவரது மூத்த மகனான சம்பாஜி முகலாயர்களின் சிறையில் இருந்தார். அதனால் சிவாஜியின் இரண்டாவது மனைவியின் மகன் சத்ரபதி ராஜாராமுக்கு முடிசூட்டப்பட்டது. ஆனால் முகலாய சிறையில் இருந்து தப்பிய சம்பாஜி, 1680 ஜூலையில் ராய்கட் கோட்டையை கைப்பற்றியதோடு, தனது தம்பி ராஜாராமையும் சிறைபிடித்து தன்னை அரசராக அறிவித்துக் கொண்டார்.
சத்ரபதி சிவாஜியின் மறைவுக்கு பிறகு மராத்திய மக்களுன் நம்பிக்கை நாயகனாக விளங்கிய சம்பாஜி, தொடர்ந்து முகலாயர்களை எதிர்த்து தீரமாக போரிட்ட சம்பாஜி 1687ல் முகலாய படைகளோடு போரிட்டபோது அவுரங்கசீப் படையால் சிறை பிடிக்கப்பட்டார். அதன்பின்னர் 1689ல் அவுரங்கசீப் உத்தரவின் பேரில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
அதோடு முடியவில்லை. சம்பாஜி இறந்ததுமே அவரது 7 வயது மகன் சாகுஜியை அவுரங்கசீப் சிறைபிடித்தார். 1707ல் அவுரங்கசீப் இறக்கும்வரை 18 ஆண்டுகளாக சாகுஜி சிறையில் இருந்தார். அதன்பின்னர் முகலாய அரசராக வந்த முகமது ஆசாம் ஷா, சாகுஜியை விடுதலை செய்ததும், பின்னர் சாகுஜி மராத்திய ராஜ்ஜியத்தின் அரசனாக முடிசூட்டிக் கொண்டதும் வரலாறு. வரலாற்றளவில் மராத்திய சாம்ராஜ்யத்துடன் முகலாயர்களுக்கு இருந்த பிணக்கு தற்போதைய வெறுப்பு மனநிலைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த வரலாற்று சம்பவங்கள் சமீபத்தில் வெளியான ச்சாவா படத்திலும் இடம்பெற்றுள்ளன. இதுதான் அம்மக்களை சினம்கொள்ள செய்துள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் மன்னரை கொன்ற முகலாய மன்னரின் கல்லறை ஏன் இங்கு இருக்க வேண்டும் என்பது மராத்திய இந்து அமைப்புகளின் கேள்வியாக உள்ளது.
ஆனால் தொடர்ந்து வரலாற்றை பார்த்தால் பல ஆட்சியாளர்களின் எச்சங்கள் இப்படியாக இந்தியாவில் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்தில் இங்கு பல வழிகளிலும் ரயில் தடங்கள் அமைக்கப்பட்டன. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பல ரயில் பாலங்கள் பிரிட்டிஷ் காலத்தில் அமைக்கப்பட்டவை. பிரிட்டனை சேர்ந்த சிலர் இந்தியாவில் பல கல்லூரி, பள்ளிகளையும் நிறுவியுள்ளனர். பிரிட்டிஷ் அடிமைப்படுத்தினர் என்ற கோபத்திற்காக அவர்களது வரலாற்று சின்னங்களை, கல்லறைகளை அழித்து விடுவதால் என்ன கிடைத்துவிட போகிறது என்பது வரலாற்று ஆய்வாளர்கள் சிலரின் கருத்தாக உள்ளது.
Edit by Prasanth.K