பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், போராட்டம் நடத்தி பணிக்கு வராமல் இருப்பவர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முன்வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, அரசின் செயல்பாட்டை பாதிக்கும் செயலாகும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது. மருத்துவ விடுப்பை தவிர, வேறு எந்த விடுப்பும் அரசு ஊழியர்கள் இன்று எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம், பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.