மூன்று கதாநாயகர்கள் நடிக்கும் பான் இந்தியா படம் தரைப்படை!
புதன், 20 டிசம்பர் 2023 (12:06 IST)
ஹீரோ யார் வில்லன் யார் என்று தெரியாத கதை: 'தரைப்படை' திரைப்படம்.
ஒரு படத்தின் கதை தொடங்கியவுடன் அந்த படத்தின் கதாநாயகன் யார் வில்லன் யார் என்று தெரிந்துவிடும். அப்படி வழக்கமான அதே வார்ப்பில் தான் எல்லா திரைப்படக்கதைகளும் அமைக்கப்படுகின்றன. படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இவர் ஹீரோ, இவர் வில்லன் என்று படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே தெரிந்துவிடும்.
ஆனால் ஒரு கதையில் யார் கதாநாயகன் யார் வில்லன் என்று தெரியாத வகையில் அந்தந்த கதாபாத்திரத்தின் கறுப்பு வெள்ளைப் பக்கங்களைப் புரட்டிக் காட்டப்படுகின்றன. ரசிகர்களுக்கு யார் நேர்நிலை நாயகன்? யார் எதிர்மறை நாயகன் ? என்று புரியாது.
அப்படி ஒரு கதையாக எடுத்து உருவாகி இருக்கும் படம் தான் 'தரைப்படை' .இது ஒரு கேங்ஸ்டர் சம்பந்தமான கதை. மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு மோசடிக் கும்பல் மக்கள் பணத்தை அபகரிக்கிறது. அந்தக் கும்பலிடமிருந்து இந்த கேங்ஸ்டர் கும்பல் அந்தப் பணத்தைக் கைப்பற்றுகிறது. இப்படி அந்தப் பணம் மாறி மாறி மனிதர்களிடம் போய்க் கொண்டிருக்கிறது.
இறுதியில் எங்கே செல்லும் என்று சொல்ல முடியாத அளவிற்குப் பயணம் நிகழ்கிறது.படத்தின் கதையையும் காட்சிகளையும் பார்க்கும் போது யார் நல்லவன் ? யார் கெட்டவன்? என்று தெரியாத வகையில் விறுவிறுப்புடன் உருவாகி இருக்கும் படம் தான் 'தரைப்படை' . இந்தப் படத்தை ராம்பிரபா இயக்கியுள்ளார். ஸ்டோனக்ஸ் நிறுவனத்தின் சார்பில் P.B. வேல்முருகன் தயாரித்துள்ளார்.
அது என்ன தரைப்படை?
அதாவது எளிய மக்களிடம் இருக்கும் ஒரு வன்முறைக் கும்பல் எப்படி கூட்டமாக இருந்து பிறருக்குத் தொல்லை கொடுக்கிறது?.திரை மறைவு வேலைகளையும் சட்டவிரோத காரியங்களையும் குழுவாக நின்று எப்படி சாதிக்கிறது? என்ற கருத்தைக் குறிப்பிடும் வகையில் தான் 'தரைப்படை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜீவா , பிரஜின், விஜய் விஷ்வா என்று மூன்று கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள். அந்த மூன்று நாயகர்களும் அவரவரும் தங்களுக்கான அடையாளங்களைத் தேடிக்கொண்டிருப்பவர்கள். ஜீவா நடித்த கொம்பு படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்பட்டது. இந்த ஜீவா, ரஜினி ரசிகர்களிடம் நன்கு பிரபலமானவர் .ரஜினி போல் மேனரிசம் காட்டுவதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.
அதேபோல நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக பிரஜின் இருக்கிறார் .அவர் நடித்த D3 திரைப்படம் தமிழ்நாட்டை விடவும் கேரளாவில் அதிக வசூல் பெற்றுத் தந்துள்ளது. விஜய் விஷ்வா சமூக சேவைகள் மூலமும் சில குறிப்பிடத்தக்க படங்களின் பாத்திரங்கள் மூலமும் மக்களிடம் நன்கு அடையாளப் படுத்தப்பட்டுள்ளவர் .
இப்படி தனித்தனியான அடையாளம் பெற்ற மூன்று பேரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஜோடியாக மூன்று அறிமுக நிலை கதாநாயகிகளும் நடிக்கிறார்கள். படத்திற்காகக் கோடிக் கணக்கில் செலவழித்து கலை இயக்குநர் ரவீந்திரன் கைவண்ணத்தில் ஒரு பிரமாண்டமான ஏர்போர்ட் செட் போடப்பட்டுள்ளது .அதில் படத்தில் முக்கியமான காட்சிகள் படமாகி உள்ளன .
மிரட்டல் செல்வாவின் இயக்கத்தில் ஆறு சண்டைக் காட்சிகள் படமாகியிருக்கின்றன இயக்குநர் ராம்பிரபாவுடன் சுரேஷ்குமார் சுந்தரம், மனோஜ் குமார் பாபு, ராம்நாத், ரவீந்திரன், மிரட்டல் செல்வா, S.V. ஜாய்மதி, ராக் சங்கர்,சரண் பாஸ்கர், ராஜன் ரீ,குருதர்ஷன், மேகமூட்டம் வைத்தி, நித்திஷ் ஸ்ரீராம் , பவிஷி பாலன்,ஸ்ரீ சாய் ஸ்டுடியோ, வெங்கட் எனப் பல்வேறு திறமைசாலிகளுடன் கூட்டணி சேர்த்துக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதை , மொழியைத் தாண்டி ரசிக்கப்படும் என்பதால் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ,ஹிந்தி என்று பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இப்படி 'தரைப்படை' திரைப்படம் ஒரு பேன் இந்தியா படமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது. படத்தின் தொழில்நுட்பப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.