2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி கார்த்தி நடிகராக அறிமுகமான பருத்தி வீரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜி கணேசனுக்கு பிறகு முதல் படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாயகனாக கார்த்தி மாறினார். இந்த படத்தில் நடித்ததற்காக பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தைப் பார்த்து பிரமித்துப் போன பாரதிராஜா என்னை எல்லோரும் கிராமிய இயக்குனர் என்கின்றனர். ஆனால் என்னால் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியவில்லையே என நான் ஆதங்கப்பட்டேன் எனக் கூறி பாராட்டினார்.
இந்த படத்துக்கு பிறகு அமீர் ஆதிபகவன் என்ற ஒரே ஒரு படம்தான் இயக்கினார். அதுவும் தோல்வி படமாக அமைந்தது. ஆனால் படத்தின் கதாநாயகனாக கார்த்தி இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து படக்குழுவினர் மறந்தாலும், ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.