தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாறன் மார்ச் 11 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸானது. வெளியானது முதல் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. படத்தில் ஒரு அம்சம் கூட ரசிக்கும்படி இல்லை என ரசிகர்கள் வெறுத்துப் பேசி வருகின்றனர். இந்நிலையில் மோசமான விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றும் விதமாக இயக்குனர் கார்த்திக் நரேன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஸ்டேட்டஸ் ஒன்று சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அதில் ரைட்டு… உண்மையை அப்புறம் சொல்றேன் என பூடகமாக தெரிவித்திருக்கிறார்.
மாறன் படப்பிடிப்பு சமயத்தின்போதே இயக்குனர் கார்த்திக் நரேனுக்கும் தனுஷுக்கும் இடையே மோதல் எழுந்ததாகவும், அதனால் கார்த்திக் நரேன் கோபித்துக்கொண்டு படப்பிடிப்புத் தளத்தை விட்டே வெளியே சென்றுவிட்டதாகவும், தனுஷே பல காட்சிகளை இயக்கியதாகவும் செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் ஒருவழியாக படம் முடிந்து ரிலிஸானது. ஆனால் படத்துக்காக எந்த ப்ரமோஷனிலும் தனுஷும் இயக்குனரும் சேர்ந்து கலந்துகொள்ளவில்லை. இதில் இருந்தே மோதல் ஏற்பட்டது உண்மைதானோ என்ற சந்தேகம் மேலும் உறுதியானது. இந்நிலையில் கார்த்திக் நரேனின் அந்த ஸ்டேட்டஸ் மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆனால் அந்த ஸ்டேட்டஸை இப்போது கார்த்திக் நரேன் நீக்கியுள்ளார்.