நான் உருவாக்கிய அழகியல் முழுக்க திருடப்பட்டுள்ளது… மம்மூட்டி படம் குறித்து இயக்குனர் ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு!

சனி, 25 பிப்ரவரி 2023 (07:01 IST)
சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆன நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் தமிழக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் முழுக்க தமிழ்நாட்டின் மஞ்சநாயக்கன்பட்டி எனும் ஊரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் காட்சிகள், அழகியல் குறித்தெல்லாம் பலரும் சிலாகித்து வரும் நிலையில் சில்லு கருப்பட்டி மற்றும் ஏலே உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ஹலிதா ஷமீம், தன்னுடைய ஏலே படத்தின் அழகியலை படத்தில் திருடியுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை இணையத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரின் முகநூல் பதிவில் “ஏலே படத்திற்காக முதன் முதலில் ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்கு தயார் செய்து அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அதே கிராமத்தில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. ஆனால், நான் பார்த்து, பார்த்து சேர்த்த அழகியல் முழுவதும் இப்படம் முழுக்க திருடப்பட்டுள்ளது.

அங்கே ஐஸ்காரர் என்றால் இங்கே பால்க்காரர். அங்கே செம்புலி என்றால் இங்கே செவலை. அங்கே அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது. நான் அறிமுகப்படுத்திய 'சித்திரை சேனன்' நடிகர்-பாடகர், ஏலே-வில் நடித்த கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டியுடன் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்.

இதில் படமாக்கப்பட்ட வீடுகள், பல முறை பார்த்து பின் நான் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள். இதுபோல், இரண்டு படத்தையும் ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய உள்ளன. எனக்காக நான் தான் பேச வேண்டும். தவிர்க்க முடியாமல், நானே பேச வேண்டிய சூழலில் இதைப் பதிவிடுகிறேன். நீங்கள் ஏலே படத்தை நிராகரிக்கலாம். ஆனால் என் சிந்தனையும், நான் தேர்வு செய்த அழகியலும் இரக்கமின்றி திருடப்படும்போது நான் அமைதியாக இருக்கமாட்டேன்” கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்