விவேக் ஓப்ராய் நடித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'பிஎம் நரேந்திரமோடி' என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகியிருக்கும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு பிரதமர் வேட்பாளரின் திரைப்படம் வெளிவருவது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் படத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு தடை கேட்டு காங்கிரஸும் வலியுறுத்தி வருகிறது.
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்துக்கும், இசை நிறுவனத்துக்கும் டெல்லியின் தேர்தல் அதிகாரி கே.மகேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு வரும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களைப் பற்றியப்படங்களை வெளியிடுவதற்கு விதிமுறைகள் உள்ளன. அதுபோல ஊடகங்களில் அரசியல் விளம்பரங்கள் வெளியாவதற்கு முன்பு ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன்னதாகவே சான்றிதழ் பெறவேண்டும். ஆனால் மோடி படக்குழு இந்த விதிமுறைகளை மீறியுள்ளதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வெளியாவதாக இருந்த மோடித் திரைப்படம் வெளியாகாது எனவும் வெளியீட்டுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார். படத்தின் இயக்குனரான ஓமங் குமாரும் இதேக் கருத்தைத் தெரிவித்துள்ளார். படம் தள்ளிப்போனாலும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. இந்தப் படத்தை அவசர அவசரமாக தணிக்கைத்துறைக்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
மகாராஷ்ட்ரவைச் சேர்ந்த நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் அமேய் கோப்கர் வெளியிட்டுள்ள புகாரில் ‘ வழக்கமாக ஒருப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறவேண்டுமானால் 58 நாட்களுக்கு முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் மோடி படத்துக்கு இந்த விதிகள் பின்பற்ற படாமல் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன. தணிக்கைக் குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி உடனடியாக தன் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.