ட்விட்டரில் #Ask என்ற ஹேஷ்டேக் மூலம் பிரபலங்கள் தங்கள் ரசிகர்கள் தங்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்குவார்கள். இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பிரபலங்கள் பதில் தருவார்கள். சமீப காலமாக ட்ரெண்டாகி உள்ள இந்த ஹேஷ்டேகில் இதற்கு முன் ஷாரூக்கான், ஆயூஷ்மான் குரானா போன்றோர் தங்கள் ரசிகர்களோடு பேசினர்.
இன்று திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் #AskAnirudh என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது , அதில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அனிருத் பதில் அளித்துள்ளார். அதில் தெலுங்கு ரசிகர் ஒருவர் ‘நீங்கள் தெலுங்கில் 3 படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளீர்கள். மீண்டும் எப்போது இசையமைப்பீர்கள்?” என கேட்டுள்ளார். அதற்கு வாய்ப்பு கிடைத்தால் எப்போது வேண்டுமானாலும் இசையமைப்பேன் என கூறியுள்ளார்.
மேலும் தர்பார் படத்தில் தான் இசையமைத்த ஒரு பாடல் வெளிவராதது குறித்தும் அதில் அவர் பேசியுள்ளார். ரஜினி டைட்டிலுக்கு வழக்கமான அண்ணாமலை தீம் மியூசிக்கே உபயோகிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். தனது முதல் பாடல் பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அனிருத் 3 படத்தில் வரும் ‘நீ பார்த்த விழிகள்’ பாடல்தான் தான் முதன்முதலாக இசையமைத்த பாடல் என தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலர் அனிருத்தின் இசைப்பயணம் குறித்து மேலும் பல கேள்விகளை கேட்டு வருவதால் #AskAnirudh இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.