பிர்சா முண்டாவால் ஆரம்பித்தது அடுத்த சர்ச்சை – ரஞ்சித் vs கோபி நயினார் ஆதரவாளர்கள் மோதல்
புதன், 14 நவம்பர் 2018 (13:52 IST)
நேற்று வெளியான ரஞ்சித் இயக்கும் பிர்சா முண்டா படத்தின் அறிவிப்பால் கோலிவுட்டில் அடுத்து ஒரு கதை சர்ச்சை உருவாகி உள்ளது.
ரஞ்சித்தின் மெட்ராஸ் படம் வெளியான போது அது கோபி இயக்கத்தில் தாங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் கருப்பர் நகரத்தின் கதையென்று தயாரிப்பாளர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ரஞ்சித் மற்றும் கோபி ஆதரவாளர்கள் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று வெளியான பிர்ஸா முண்டா வாழ்க்கைப் பற்றிய அறிவிப்பு இப்போது புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அறம் பட இயக்குனர் கோபி நயினார் சில மாதங்களுக்கு முன்னால் அளித்த ஒரு நேர்காணலில் தனது அடுத்தப் படம் இதே பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாறைப் பற்றியது எனக் கூறியிருந்தார்.
இந்த நேர்காணலை மேற்கோள் காட்டி திரைக்கதை ஆலோசகர் கருந்தேள் ராஜேஷ் ’நான் கோபி நயினாரை நம்புகிறேன். கறுப்பர் நகரம் முதல் இன்று வரை’ என தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவு ரஞ்சித்துக்கும் கோபிக்கும் இடையே நடந்த கதை திருட்டு சர்ச்சையை மீண்டும் கிளறியிருக்கிறது.
கருந்தேள் ராஜேஷின் இந்த பதிவுக்கு காலா படத்தின் வசனகர்த்தா மகிழ்நன் தனது முகநூலில் ’இயக்குனர் கோபியை நான் நம்புகிறேன் என்று கருந்தேள் ராஜேஷ் எழுதியிருக்கிறார்.நம்புங்கள் அது உங்கள் வசதி...உங்கள் நம்பிக்கைக்கு தர்க்கம் தேவைப்படாமல் இருக்கலாம்...
ஆனால், உண்மைக்கு தேவைப்படும்....
கோபியின் கருப்பர் நகரம் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்டிராங் மெட்ராஸுக்கும், கருப்பர் நகரத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்று எழுதினார். கருப்பர் நகரம் ஸ்கிரிப்டை படித்த எழுத்தாளர் கரன் கார்க்கி, மெட்ராஸுக்கும் கருப்பர் நகரத்திற்கும் தொடர்பில்லை என்று எழுதினார்.
அதெல்லாம், போதாதென்று கருப்பர் நகரத்தின் தயாரிப்பாளர் பாலு, அவருடைய அண்ணன் வீரக்குமார் ஆகியோரும், அந்த கதைக்கும், கருப்பர் நகரத்திற்கு தொடர்பில்லை என்றனர்... ஏன், அறம் படத்தையொட்டியே, தேவையேயில்லாமல், காழ்ப்பின் அடிப்படையில், இரஞ்சித் மீது முகநூலில் அவதூறை அள்ளி சில முட்டாள்கள் வீசியபோது, நான் கோபியை அழைத்து பேசினேன். என் வீட்டிற்கு அழைத்து பேசினேன்..
”நான் இதுவரை மெட்ராஸ் என்னுடைய கதை என்று சொன்னதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்.
எதற்காக உங்களுடைய சக படைப்பாளி மீது தொடர்ந்து வன்மத்தோடு சேறள்ளி வீசப்படுவதை குறித்து மௌனமாக இருக்கிறீர்கள், உங்கள் படத்தின் காப்பி இல்லை என்ற உண்மையை வெளியில் சொல்லிவிடலாமே என்று சொன்னதற்கு “அதை எப்படி நான் சொல்வது, தர்மசங்கடமாகி விடும்” என்று கூறினார்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இயக்குனர் கோபிக்கும், தோழர் மீரா கதிரவனுக்கு விருது வழங்கப்பட்ட போது, மேடையிலேயே, ”என் கதைக்கும், கோபி அவர்களின் கதைக்கு எவ்வித தொடர்புமில்லை. அவரோடு நான் எவ்வித ஸ்கிரிப்ட் விவாதமும் நடத்தவில்லை.” என்று கூறியபின்னரும்...
உங்களுக்கு போதுமான தரவுகள் இல்லை என்று உங்கள் பங்குக்கு நீங்களும் சேறள்ளி வீசுவீர்கள் என்றால்...
அறம் பற்றி ஜெயமோகன் வகையறாக்கள்தான் பேசுவார்கள்..
காலா படபிடிப்பு நடந்து கொண்டிருந்த போதே, ஏன் அதற்கு முன்னரே, பிர்சாவை பற்றி படமாக்கும் எண்ணம் இருந்ததையும், அதற்கான திட்டப்பணிகள் தொடங்கிவிட்டதையும், தோழர்பரிசல் சிவ. செந்தில்நாதன், , தோழர் Madhav Katta ,
தோழர் பிரசன்னா பாலசந்திரன் ஆகியோர் நன்றாக அறிவார்கள். எனக்கு தெரிந்து மேலும், ஒரு சாட்சி தோழர் கொற்றவை கூட..
மேற்கண்டவர்களுக்கு, தயாரிப்பாளரை உறுதி செய்யாமல், ஐடியா இருக்கிறது என்று கோபி ஒவ்வொரு ஊடகத்துக்கும் அழைத்து அறிவித்த அக்டோபருக்கு முன்னரே தெரியும்...
ஆனாலும், நம்ப மாட்டேன், வாழ்க்கையை கெடுக்கிறாங்க தவறான சித்திரத்தை ஏற்படுத்தாமல்... நம்புங்கள்...மூடநம்பிக்கையோடு இருப்பதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.
வாழ்த்துகள்...
தொடர்ந்து ஒரு கலைஞன் மீது அவதூறு அள்ளி வீசப்படும் போது, ஈயம் பூசுன மாதிரியும், பூசாதது மாதிரியும் இருக்கணும் என்பது போல இல்லாமல், அறமற்று செயல்படும் நபரை குறிப்பாக அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துங்கள்...
சும்மா, இரண்டு பக்கமும் தோழமை பாராட்ட வேண்டாம்’ இவ்வாறு எதிர்வினயாற்றியுள்ளார்.