#Metoo இயக்கத்தால் இந்தியத் திரையுலகில் புயல் வீசி வருகிறது. திரையுலகில் பெண்கள் ஒவ்வொருவராக தங்களது மௌனத்தை கலைத்து, தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை தைரியமாக பதிவிட்டு வருகிறார்கள். பாலிவுட்டில் நானா படேகர் விகாஸ் பாகல், சுபாஷ் கபுர், நடிகர்கள் அலோக்நாத், சேத்தன் பகத், ஹிருத்திக் ரோசன், ஆகியோர் மீது பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் எழுந்தது.
இந்நிலையில் தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக 'அனேகன்' படம் மூலம் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர், சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 'தனக்கும் திரையுலகில் பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டதாகவும், அதனால் மன உளைச்சல்களுக்கு ஆளனதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் "என்னுடன் நடித்த ஒரு நடிகர், என்னைத் தவறான முறையில் இறுக்கினார். அதை உணர்ந்த நான் இயக்குநரிடம் புகார் செய்தபோது, அதை அவர் கண்டுகொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார். வேண்டுமென்றே படக்காட்சியைத் தாமதமாகப் பதிவுசெய்தனர்."
"சில இடங்களில், அந்த நடிகரை உதாசீனப்படுத்தியதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் அந்த நடிகரிடம் என்னை மன்னிப்பும் கேட்கச் சொன்னார். "என்னிடம் தவறாக நடந்தவர்கள் யாரென்று நான் இப்போது கூற மாட்டேன். அவர்கள், இந்தத் துறையில் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள் என்றும், யாரென்றும் அவர்களுக்கே தெரியும். ஒரு நாள், அவர்கள் யாரென்று பெயரை சொல்வேன்" என்றார்.