இலங்கை ராணுவத்திற்கு பாராட்டு: சரத்குமார் கடும் கண்டனம்

சனி, 10 அக்டோபர் 2015 (01:07 IST)
மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவத்தினரை, அந்நாட்டு அதிபர் பாராட்டியுள்ள செயல், கடும் கண்டனத்திற்குரியது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
இலங்கையில் போரின் போது, தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை ராணுவம். இந்த நிலையில், மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு ராணுவத்தினரை இலங்கை அதிபர் கௌவுரவித்துள்ளது கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
 
இலங்கை ராணுவம் புரிந்தது போர்க்குற்றம் என்றால், அந்நாட்டு ராணுவத்தினரும் போர்க்குற்றவாளிகள் என்றே பொருள் கொள்ள வேண்டும். எனவே, அது போன்ற கொடிய குற்றங்கள் செய்தவர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  தண்டனை பெற வேண்டும். ஆனால், அந்நாட்டு ராணுவத்தினரை அழைத்து இலங்கை அரசு பாராட்டு நடத்தியுள்ளது கடும்  கண்டனத்திற்கு உரியது.
 
இலங்கையில், லட்சக்கணக்கில் குடும்ப உறவுகளை இழந்து நிற்கும் தமிழினத்திற்கு ஆறுதலும், நிவாரணமும், சம உரிமையும் தரவேண்டிய இலங்கை அரசு, அதை செய்யாமல், மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவத்தை பாராட்டியுள்ள செயல், ஒட்டுமொத்த தமிழினத்தின் இதயங்களில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
 
எனவே, தமிழர் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ள இலங்கை அரசை, மத்திய அரசும் கண்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்