வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஷரபோவா தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த புதனன்று இரவு மோன்ரியலில் நடந்த போட்டிக்கு பின்னர், வலது தோள்பட்டையில் கடும் வலி இருந்ததாகவும், இதையடுத்து ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகும் முடிவை தாம் எடுத்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 3 முறை கைப்பற்றியுள்ள ஷரபோவா, ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆகஸ்ட் 11, 17ஆம் தேதி வரை பீஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் இருந்து, சைப்ரஸ் நாட்டு வீரர் மார்கோஸ் பாதாதிஸ் மணிக்கட்டு காயம் காரணமாக ஏற்கனவே விலகியது நினைவில் கொள்ளத்தக்கது.