இந்திய ஹாக்கி வீரர்கள் தங்கள் நாட்டிற்காக ஆடிய திறமை வாய்ந்த முன்னாள் வீரர்களின் பாணியை கடைபிடித்து ஆடவேண்டும் என்று இந்திய ஹாக்கிக்கான ஆலோசகர் ரிச் சார்ல்ஸ்வொர்த் கூறியுள்ளார்!
சண்டிகரில் இன்று யு.என்.ஐ. செய்தியாளரிடம் பேசியுள்ள சார்ல்ஸ்வொர்த், ஐரோப்பிய ஆட்ட முறையை கடைபிடிப்பதைவிட, இந்திய பாணியில் ஆடவும், அதில் தங்களுடைய ஆட்டத் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் இந்திய வீரர்கள் முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.
மலேசியாவில் நடைபெற்ற அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியில் இறுதிக்குத் தகுதி பெற்ற பெருமையில் இந்திய வீரர்கள் மூழ்கிவிடக்கூடாது என்றும், அவர்கள் தங்களது பலம், பலவீனங்களை நன்கு புரிந்துகொண்டு ஆட்ட நுணுக்கங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
"இந்திய அணியில் மிகச் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால், பல விஷயங்கள் முறையாக இல்லை. அதுகுறித்து நாங்கள் மதிப்பீடு செய்வோம். அதிகமான சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இந்திய ஹாக்கி அணியைப் பொறுத்தவரை சீர்தன்மையில்லாததே பெரும் பிரச்சனையாக உள்ளது. நியூஸீலாந்து அணிக்கு எதிராக 2 கோல்கள் அடித்து முன்னிலைக்கு வந்த பிறகு 4-3 என்ற கோல் கணக்கில் தோற்பது ஏற்கத்தக்கதல்ல" என்று கூறினார்.
இந்திய அணி அஸ்லான் ஷா போட்டியில் ஆடியபோது அதனை வீடியோவில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் கூட இல்லை. நான் எனது சொந்த கேமராவில் பதிவு செய்தேன். இந்திய ஹாக்கிக்கு சிறந்த தலைமையை அளிப்பது மிகவும் அவசியமானது. ஒரு முறையான திட்டத்தின்படி பயிற்சி செய்ய வேண்டும் என்று சார்ல்ஸ்வொர்த் கூறினார்.