பீஜிங்கில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் பிரிவு 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 9.69 நொடிகளில் ஓடி புதிய உலக சாதனை படைத்து உலகின் அதி வேக ஓட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்ற உசைன் போல்ட், இன்று நடந்த 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், பந்தய தூரத்தை 19.30 நொடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.
இதன் மூலம் அமெரிக்காவின் மைக்கேல் ஜான்சன் ஏற்படுத்தியிருந்த 19.32 நொடிகள் சாதனையை முறியடித்தார் உசைன் போல்ட்.
பந்தயம் துவங்கிய சில நொடிகளிலேயே தனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்த (இரண்டாவதாக வந்த) வீரரைக் கடந்த போல்ட், 100 மீட்டர் தூரத்தை எட்டுவதற்குள் அனைத்து வீரர்களையும் கடந்து முன்னிலைக்கு வந்தார். அதன் பிறகு போட்டி ஏதுமின்றி ஓடிய போல்ட், வேகக் கடியாரத்தைப் பார்த்துக் கொண்ட ஓடி வந்து புதிய சாதனைப் படைத்தார்.
10 நிமிடத்தில் இரண்டாவது தங்கம்!
உசைன் போல்ட் தங்கம் வென்ற 15 நிமிட இடைவெளியில் நடந்த மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை மெலைனி வால்கர் தங்கம் வென்றார்.
பந்தய தூரத்தை 52.64 விநாடிகளில் இவர் கடந்தது புதிய ஒலிம்பிக் சாதனையாகும்.