பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் 75 கி.கி. மிடில் வெயிட் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் விஜேந்தர் குமார், ஈகுவேடர் வீரரை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
சற்றுமுன் (இந்திய நேரப்படி 6.45 மணியளவில்) நடந்து முடிந்த இப்போட்டியில் ஈகுவேடர் வீரர் கர்லோஸ் கொன்கோராவுடன் மோதிய விஜேந்தர் மிகச் சிறப்பாக சண்டை செய்து 9-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.
மொத்தம் 4 ரவுண்டுகள் கொண்ட இப்போட்டியில் முதல் ரவுண்டில் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் விஜேந்தர் முன்னிலை பெற்றார். 2வது ரவுண்டில் கர்லோஸ் ஒரு புள்ளியும், விஜேந்தர் 2 புள்ளிகளும் பெற்றனர். இதனால் அந்த ரவுண்டின் முடிவில் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் விஜேந்தர் முன்னிலையை தக்க வைத்துக் கொண்டார்.
அடுத்த நடந்த 3வது ரவுண்டில் அபாரமாக சண்டையிட்ட விஜேந்தர் 3 புள்ளிகளைப் பெற்று 7-2 என்று தனது வெற்றியை உறுதி செய்து கொண்டார். இறுதி ரவுண்டில் இரு வீரர்களுமே தலா 2 புள்ளிகளைப் பெற்றனர். முடிவில் 9-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்று விஜேந்தர் அரையிறுதிக்குள் நுழைந்தார்.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய குத்துச் சண்டை வீரர் ஒருவர் அரையிறுதிக்குத் தகுதி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அபாரமாக சண்டையிட்டுவரும் விஜேந்தர் அரையிறுதியில் வென்றால் இறுதியில் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் பெறுவார். அரையிறுதியில் தோற்றாலும் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கும். எனவே இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகிவிட்டது.